காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் மனு கையளிப்பு
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனுவென்றை கையளித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (11.03.2024) காலை குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட செயலகத்திற்கு சென்ற குறித்த மக்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, மற்றும் அரசாங்க அதிபருக்கான மனுவென்றையும் கையளித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட காணி
பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கேப்பாப்பிலவு மக்களின் ஒரு பகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்னும் 2500 ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கவேண்டி இருப்பதாக கேப்பாபிலவு மக்களிடம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அகற்றப்படும் முகாம்கள்
இதன்போது மக்களிடம் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்தெந்த முகாம்கள் அகற்றப்படும் என்று விபரம் கிடைத்துள்ளது. அதற்குள் இது இல்லை எதிர்காலத்தில் விடுகின்றார்களே தெரியவில்லை.
இதன்படி உங்கள் மனுவினை உரிய இடங்களுக்கு தெரியப்படுத்திக்கொண்டு காணிவிடுவிப்பு தொடர்பில் அறியப்படும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
இராணுவத்தால் விடுவிக்கப்படவேண்டிய விபரங்களை என்னிடம் கேட்டறிந்தார். இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 2500 ஏக்கர் காணி இராணுவத்தால் விடுவிக்கவேண்டி உள்ளது. 1500 ஏக்கர் வரையில் விடுவிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |