மாணவி கிருஷாந்தி படுகொலை! குற்றவாளிகளான முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நீதிமன்றின் பதில்
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாணவி கிருஷாந்தி குமாரசாமி வழக்கில், 1998 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட, குற்றவாளிகளான முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட மனுதாரர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உயர் நீதிமன்றின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இன்று ஒருமனதாக மனுவை மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியை மறுத்து தள்ளுபடி செய்துள்ளது
கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை வழக்கில் குறித்த ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து 1998 ஆம் ஆண்டு தீர்பளிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
இந்நிலையில் தங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால், ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

தங்கள் சமர்ப்பிப்புகளில், மரண தண்டனை என்ற பேரில் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கொடூரமானது என்றும், மனிதாபிமானமற்றது என்றும், இதன் மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
இதற்கமைய சிறைச்சாலை ஆணையர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான மூத்த துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க, பல ஆரம்ப ஆட்சேபனைகளை இதன்போது எழுப்பியுள்ளனர்.
சட்டமா அதிபர் எழுப்பிய முக்கிய ஆட்சேபனைகளில், ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் விருப்பப்படி மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு குற்றவாளியும் அதை சட்டப்பூர்வ உரிமையாகவோ அல்லது உரிமையாகவோ கோர முடியாது என்றும் கூறியுள்ளனர்.
கிருஷாந்தி குமாரசாமி
இதன்படி விண்ணப்பம் காலக்கெடுவுக்கு உட்பட்டது என்றும் மனுதாரர்கள் சுத்தமான கைகளுடன் நீதிமன்றத்தை அணுகத் தவறிவிட்டனர் என்றும் சட்டமா அதிபர் வாதிட்டுள்ளார்.

இந்நிலையில் நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க, அச்சலா வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தரா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டு அதன்படி மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.
1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ காவலரணில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தி கழுத்தை நெரித்துபடுகொலை செய்திருந்தனர்.
செம்மணி இராணுவ காவலரணில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனான யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ காவலரணில் விசாரித்த வேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு மரண தண்டனையை அப்போதைய உயர் நீதிமன்றின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட அமர்வு, உறுதி செய்து அவர்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
     
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        