தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்! பலாலி மக்கள் திட்டவட்ட அறிவிப்பு
தமது பூர்வீக வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும் மீட்டுத் தருமாறு கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் காணி விடுவிப்புப் போராட்டம் இன்று(29.11.2026) 24ஆவது வாரமாகவும் தொடர்ந்தது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் பலாலிச் சந்தியில் ஒன்றுகூடிய பொதுமக்கள், தமது நீண்டகாலக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமுறை தலைமுறையாகத் தமது குடும்பங்களுடன் வாழ்ந்து, விவசாயம் செய்து வாழ்வாதாரத்தைப் பேணி வந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், 36 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மீண்டும் தமது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
காணி மீட்புக் கோரிக்கை
இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், காணி என்பது வெறுமனே நிலத்தின் ஒரு பகுதியல்ல எனவும், அது ஒரு குடும்பத்தின் வரலாறு, வாழ்வாதாரம், நினைவுகள், பண்பாடு மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் உரிமையோடு பின்னிப் பிணைந்த ஒன்று எனவும் சுட்டிக்காட்டினர்.

தமது காணி மீட்புக் கோரிக்கையை வெறுமனே நிலத்தை மீளப் பெறுவதற்கான கோரிக்கையாக மட்டும் பார்க்காது, தமது வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை உரிமைப் போராட்டமாகப் பார்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
36 ஆண்டுகள் கடந்தும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை தொடர்வதால், மக்களின் எதிர்பார்ப்புகளும் பொருளாதாரச் சுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தொழில் நடவடிக்கை
தமது பூர்வீகக் காணிகளில் மீண்டும் குடியேறி விவசாயம் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது எனத் தெரிவித்தனர்.

24 வாரங்களாகத் தொடரும் இந்தப் போராட்டத்துக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனவும், தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரும் ஆசிரியர்கள் மீது சேறு பூச வேண்டாம்! தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்