சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரும் ஆசிரியர்கள் மீது சேறு பூச வேண்டாம்! தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியர் - அதிபர்களின் சுமார் 30 வருடகால சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களையும் அதிபர்களையும் எதிர்க்கட்சியினர் அல்லது அரசாங்க எதிர்ப்பாளர்கள் என முத்திரை குத்தி அவதூறு பரப்ப வேண்டாம் என தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரவணமுத்து பாலசேகரம் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஹட்டனில் நடைபெற்றது.
பல பாரிய போராட்டங்கள்
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஆசிரியர் - அதிபர்களின் சம்பள முரண்பாடு இன்று நேற்று உருவான பிரச்சினையல்ல. சுமார் 30 வருடங்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி கடந்த காலங்களில் பல பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தப் போராட்டங்களில் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிப்பவர்களும் பங்கேற்றிருந்தனர். அக்காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளில், ஆசிரியர் - அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட சுபோதனி ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் கல்விக்காக மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை ஒதுக்குதல் ஆகியனவும் அடங்குகின்றன.
எனினும்இ கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் பாடசாலை அபிவிருத்தி கற்றல் உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான போசாக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதன் சுமைகள் இறுதியில் பெற்றோர்கள் மீது சுமத்தப்படுகின்றன.

மாணவர்களுக்கான நலத்திட்டங்கள்
குறிப்பாக மலையகப் பகுதிகளில் பெற்றோரின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடருமானால் இலவச சீருடை பாட புத்தகங்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் ஆசிரியர்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்து வருகின்றனர். இந்தப் பின்னணியிலேயே நாடளாவிய ரீதியில் 20 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கவுள்ளனர்.
இதில் எவ்வித அரசியல் நோக்கம் அல்லது அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடு கிடையாது. எனவே, ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணப்படும் வரை இடைக்கால கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் பாரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் தவிர்க்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.