இறைமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்: சிறிதரன் எம்.பி
இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று(2.8) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இறமையை மீட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.அது ஆயுதப் போராட்டமா, அறவழிப் போராட்டமா என்பதை எங்களுக்கு எதிராக யார் போர் தொடங்குகிறாரோ, அவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
போராட்டம்
நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதும் இலங்கை அரசு தான் தீர்மானிக்க வேண்டும்.அது அறவழியா, ஆயுதமா என்பதை காலம் தான் அதற்குரிய பதிலையும் சொல்லும்.
போர் என்பதும் போராட்டத்தினுடைய வலி என்பதும் எங்களுக்குள் இருக்கிறது.நாங்கள் ஒரு தேசத்தின் விடுதலைக்காகப் போராடினோம்.

எங்களுடைய கைகளிலே துப்பாக்கி இருந்தது, பெரிய பீரங்கிகள் இருந்தது, விமானங்கள் இருந்தது, கப்பல்கள் இருந்தது. நாங்கள் போராடினோம்; உலகத்தின் கண்களை நிமிர்ந்து பார்க்க வைத்தோம்.
ஆனால், மௌனிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் நாங்கள் பேசப்படுகிறோம், ஒரு இனமாக இந்த உலகத்திலே அங்கீகரிக்கப்படுகிறோம். காலமும் சூழலும் இயற்கையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
இயற்கை தான் விரும்பும் பொழுது, அந்த நேரத்தில் உள்ள ஒரு தலைவனை இயற்கை தெரிவு செய்கிறது. ஆகவே தலைவர்கள் பிறந்து வருவதில்லை இருப்பவர்களில் ஒருவரை இயற்கை தானாகத் தெரிவு செய்கிறது எனக் குறிப்பிட்டார்.