இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்: உலக தமிழர் பேரவை
ஜெனிவாவில் நடைபெறும், மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
உலக தமிழர் பேரவை, ஊடக அறிக்கையொன்றில் இது தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, போரின் போது பாரியளவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், அனைத்து சமூகங்களினதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமைகள் உயர்ஸ்தானியகரம்
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆற்றிய பங்கு இந்த விடயத்தில் முக்கியமானது.
கடந்த மாதம் உயர்ஸ்தானிகராக இருந்த மிச்செல் பெச்லெட்டின் முன்மாதிரியான சேவைக்காக, பேரவை தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதோடு புதிய உயர்ஸ்தானிகர் வோல்கர் சேர்க்கை பேரவை வரவேற்றுள்ளது.
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியானது, இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்துடன் தொடர்புடைய பொறுப்பற்ற நிர்வாகத்தின் செயற்பாடுகள் என்பது, உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது.
ஆழமடைந்து வரும் இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையின்மை, பொறுப்புக்கூறல் இல்லாமை, பாரிய மனித உரிமை மீறல்களுக்கு தண்டனையில்லாமை மற்றும் ஊழல் என்பன அதிகார துஷ்பிரயோகத்திற்கான சூழலை உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம்
இதன்போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கடுமையான அணுகுமுறையை அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளதோடு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாணவ தலைவர்களை தடுத்து வைப்பதற்கும், நீண்டகாலமாக தமிழ் மற்றும் முஸ்லிம் கைதிகளைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கும் தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக ஆணையாளரின் அறிக்கை கூறுகின்றது.
இலங்கையில் இந்த ஆண்டு பாதுகாப்புக்காக 1.86 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது. இது மொத்த அரசாங்க செலவினத்தில் 15 சதவிகிதம் ஆகும்.
பெரும் நிதி நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டில் இத்தகைய உயர் பாதுகாப்புச் செலவுகள் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படுவதை ஆணையாளரின் அறிக்கை கண்டித்துள்ளது.
வேண்டுகோள் விடுத்த உலக தமிழர் பேரவை
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் எந்தவொரு வெளிப்புறப் பொறிமுறைக்கும் இணங்காது, இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் உள்ளக உண்மையைத் தேடும் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் அறிவிப்பை சர்வதேச சமூகம் அவதானிக்க வேண்டும் என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பான உரையாடலின் போது கருத்து தெரிவித்தமைக்காக இந்தியாவுக்கு தமிழர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
இதன்போது 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான அர்ப்பணிப்புகளில் இலங்கை அரசாங்கத்தால் அளவிடக்கூடிய முன்னேற்றமின்மை குறித்து இந்திய பிரதிநிதிகள் கவலை வெளியிட்டதை பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள்
துரதிஷ்டவசமாக, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள், ஆரோக்கியமான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை. எனினும் இதனை பொருட்படுத்தாமல், இலங்கை தொடர்பான பொறுப்புள்ள செயற்பாடுகள், சர்வதேச சமூகத்தால் மனசாட்சியுடன் ஊக்குவிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமே இது சாத்தியமாகும்.
இந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் செப்டெம்பர் மாதங்களின் உயர்ஸ்தானிகரின் அறிக்கைகளில் பட்டியலிடப்பட்டுள்ள விரிவான பரிந்துரைகள், ஐக்கிய நாடுகளின் அமைப்புகள், பொதுச் செயலாளருக்கும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட வேண்டும்.
இதன்போது மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளான, மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஆகிய இரண்டுக்கும் ஒரு நிபுணத்துவ பொறிமுறையை நிறுவுவதன் மூலம், கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான ஆணையை வலுப்படுத்த முடியும் என்ற யோசனையை அங்கீகரிப்பதாக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் உரிமைகளைப் பாதுகாத்தல், நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் தீர்மானத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய காலப்பகுதியில் இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கான போதுமான நிதியளிப்பது என்பன, இலங்கை தொடர்பான முக்கிய குழு உட்பட உறுப்பு நாடுகளின் பொறுப்பாகும் என உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.