போர் குற்றங்கள் தொடர்பான யோசனை:ஜெனிவாவில் கடும் முயற்சியில் தமிழ் தரப்பு
இலங்கையில் நடைபெற் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுக்கும் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் பரிந்துரையை இலங்கை சம்பந்தமான யோசனையில் நிறைவேற்றும் நோக்கில் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன் ஐ.நா மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள தமிழ் கட்சிகள்
இதனடிப்படையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் டொலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் ஜெனிவா சென்றுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை சம்பந்தமாக பிரித்தானிய தலைமையில் முன்வைக்கப்பட உள்ள யோசனைகளை தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த யோசனையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சம்பந்தமான பரிந்துரையை உள்ளடக்க கூடியளவிலான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் இலங்கை சம்பந்தமாக பதில் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த அறிக்கையில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் அனுப்பி இருந்த சில யோசனைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
எனினும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முன்வைத்திருந்த யோசனை அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கிடைத்த விசேட அழைப்புக்கு அமைய ஜெனிவா சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
15 ஆம் திகதி ஆரம்பமாகிய இலங்கை சம்பந்தமான பேச்சுவார்த்தை
கடந்த 15 ஆம் திகதி மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தன.
தமிழ்த் தேசியக்கூடடமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுமன் அடுத்த சில தினங்களில் ஜெனிவா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமான மிகவும் வலுவான யோசனையை நிறைவேற்றுவது அவசியம் எனவும் அதற்கு பேரவையின் அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவை கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.