உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்!
இந்தோனேசியாவின்(Indonesia) டோராஜன்(Toraja) மக்கள் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவல்ல.அது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஒருவரை அழைத்துச் செல்கின்றது.
இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வினோதமான பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது உயிரிழந்தோரின் உடலைப் பல வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் வரையில் வீட்டில் அப்படியே வைத்திருக்கிறார்கள்.
வினோத கிராமம்
மேலும், இறந்தவர்கள் உயிருடன் இருப்பதைப் போலவே அவர்களை நடத்துகிறார்கள். டோராஜன் இன மக்கள் தங்கள் குடும்பத்தில் யாராவது உயிரிழந்தால் அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என்பதை விட நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவே கருதுகிறார்களாம்.
உயிரிழந்தோருக்கு வீட்டில் தனியாக ஒரு அறை, புதிய ஆடைகள் மட்டுமின்றி அவர்களுக்கான அறையை தொடர்ந்து சுத்தம் செய்தும் வருகிறார்கள். மேலும், நேரத்திற்கு உணவு, சிகரெட் அவ்வளவு ஏன் கழிப்பறை அமைப்பு போன்ற அம்சங்களும் உள்ளனவாம்.
இதே நடைமுறையைத் தான் அவர்கள் மாதக் கணக்கில் பின்பற்றுவார்களாம். குடும்பத்தில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும்போது அந்த துயரத்தை ஈடு செய்ய முடியாது.
அப்போது உடனே அவரை புதைத்துவிட்டால் அது பெரும் சோகமாக அமையும் என்ற காரணத்தினால் இந்த முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகின்றது.
டோராஜன் இன மக்கள்
அவர்களது இழப்பை மனது ஏற்றுக் கொள்ளும் வரை வீட்டிலேயே வைத்திருப்பதுடன் அதன் பிறகே அடக்கம் செய்கிறார்கள். இப்படிப் பல மாதங்களுக்குப் பிறகு டோராஜன் இன மக்கள் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளை நடத்துவார்கள்.
ஒருவரது அந்தஸ்தைப் பொறுத்து இந்த இறுதிச் சடங்கு மாறுபடும். அங்குப் பணத்தைப் பொறுத்து இறுதிச் சடங்கைப் பிரம்மாண்டமாக நடத்துகிறார்கள். பணக்காரர்கள் மற்றும் அதிக செல்வாக்கு கொண்ட நபர்கள் விருந்துகளை வைப்பார்கள். இசை, நடனம் எனப் பிரம்மாண்டமான முறையில் இறுதிச் சடங்கை நடத்துவார்கள்.
மேலும், அந்நாட்டுக் கலாச்சாரத்தில் எருமைகள் புனிதமாகக் கருதப்படும். இறந்தவரின் பயணத்தை அடையாளப்படுத்தும் வகையில், அந்த எருமைகளைப் பலியிட்டு விருந்து கொடுப்பார்களாம்.
சடங்குகள்
இதன் காரணமாக இறுதிச் சடங்கை நடத்த போதுமான நிதி சேகரிக்கப்படும் வரை உடலை அங்கு வீட்டிலேயே வைத்திருப்பார்களாம். இந்த சடங்குகள் அனைத்தும் முடியும் வரை அவரது ஆன்மா அங்கேயே சுற்றி வரும் என்றே நம்பப்படுகிறது.
உடலைப் புதைத்த பிறகும் கூட டோராஜன்கள் இன மக்கள் மானேனே என்ற சடங்கைத் தொடர்ந்து செய்வார்கள்.
அதாவது புதைக்கப்பட்ட சடலங்களை எடுத்து அதைச் சுத்தம் செய்வார்களாம். அப்போது அவர்கள் அவர்களுக்கு புதிய ஆடைகளை உடுத்தி, அழகுபடுத்துகிறார்கள்.
மேலும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார்கள்.. இதை முதியவர்களுக்குக் காட்டும் மரியாதையாகவே கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
