ஹெரோயின் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப்படை சார்ஜன் கைது
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் ஒருவர் களுத்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து 3 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னதாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகின.

குறித்த சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் எஸ்.ரீ.எப் எனப் பதிவு செய்யப்பட்டிருந்த இலக்கம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டனர்.
அந்த இலக்கத்திற்குரிய அதிகாரியே தனக்குப் பணத்திற்குப் பதிலாக ஹெரோயின் விநியோகித்ததாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, வழங்கப்பட்ட போதைப்பொருளுக்கான பணத்தைப் பெற்றுக்கொள்ள வருமாறு குறித்த விசேட அதிரடிப்படை சார்ஜன்ட்டைத் தொடர்புகொண்டு அழைக்குமாறு பொலிஸார் ஏற்பாடு செய்தனர்.
அதற்கமைய, பணத்தைப் பெற்றுக்கொள்ள வந்த போதே களுத்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தனது உத்தியோகபூர்வ கடமை நேரங்களிலும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், பல்வேறு பொலிஸ் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருட்களையே அவர் இவ்வாறு கடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
களுத்துறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், களுத்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.