டிரான் அலஸுக்கான பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் (Tiran Alles) உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக எச்சரிக்கும் உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டி, இலங்கை அரசாங்கம் அவருக்கு சிறப்புப் பணிக்குழு (STF) பாதுகாப்பை தொடர்ந்து வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
"கடந்த 11ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பிற முன்னாள் அதிகாரிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.
இருப்பினும், டிரான் அலஸுக்கு ஏன் இன்னும் எஸ்.டி.எஃப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது” என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஒரு பத்திரிகையாளரால் வினவப்பட்டது.
உயிருக்கு அச்சுறுத்தல்
இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. மேலும், பாதுகாப்பு ஒதுக்கீடுகள் புலனாய்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்தவை என்று அமைச்சர் ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், டிரான் அலஸைப் பாதுகாக்க ஆரம்பத்தில் 19 அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக ஒரு மூத்த எஸ்.டி.எஃப் அதிகாரி உறுதிப்படுத்தியதாக இன்று பிபிசி செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, டிரான் அலஸின் நெருக்கமான பாதுகாப்புப் பணியாளர்களாக ஏழு அதிகாரிகளும் மேலும் 12 பேர் அவரது வீடு மற்றும் பிற இடங்களில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில், பாதாள உலகக் குழுக்களிடமிருந்து வந்த அச்சுறுத்தல்கள் காரணமாக, டிரான் அலஸ் முதன்முதலில் எஸ்.டி.எஃப் பாதுகாப்பைப் பெற்றார்.
சிறப்புப் படை வீரர்கள்
இந்நிலையில், புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து தனக்கு ஒதுக்கப்பட்ட எஸ்.டி.எஃப் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவையில் உரையாற்றிய போது அவர் கூறியுள்ளார்.
இதன்போது, "எனது பாதுகாப்பிற்காக இப்போது ஆறு சிறப்புப் படை வீரர்கள் மாத்திரமே உள்ளனர். உளவுத்துறை அறிக்கைகள் எனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக எச்சரித்தது மட்டுமல்லாமல், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆபத்துகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டின" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த பாதுகாப்பு தேவை குறித்து தீர்மானிப்பதற்கான ஒதுக்கீடுகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும், "நாங்கள் அவ்வப்போது மதிப்பீடுகளை நடத்தி சரி செய்தல்களைச் செய்கிறோம். பாதுகாப்பு இனி தேவையில்லை என்றால், அது அகற்றப்படும்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |