அரசாங்கம் மேற்கொள்ளும் சட்ட ரீதியான மறுசீரமைப்புக்கள்: சாகல விளக்கம்
ஆட்சி மாறும் போது கொள்கைகள் மாறுவதற்கு ஏற்ப பல்வேறு நிதி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் சட்ட ரீதியான மறுசீரமைப்புக்களை அரசாங்கம் தற்போதும் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நடைபெற்ற அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பிலான தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2020 கொவிட் பரவலுக்கு மத்தியிலும் இந்த பணிகள் இடம்பெற்ற நிலையில், பொருளாதார சரிவின் காரணமாக அவற்றை இடைநிறுத்த வேண்டிய நிலை உருவானது. தாமதமாகியேனும் தற்போது இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது. இது பொருளாதாரத்திற்கு பெருமளவில் வலு சேர்க்கும்.
அதிவேக வீதிக் கட்டமைப்புக்கள்
அதன்படி 3 தசாப்தங்களுக்கு முன்பாக திட்டமிடப்பட்ட அதிவேக வீதிக் கட்டமைப்பு இப்போது கிடைத்திருக்கிறது.
கொழும்பு நகரின் செயற்பாடுகளை இடையூறு இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கும், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இடையில் காணப்படும் வாகன நெரிசலை மட்டுப்படுத்துவதற்காகவும் இந்த அதிவேக வீதி அமைந்திருப்பதோடு, நாட்டின் அதிவேக வீதிக் கட்டமைப்புக்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாகவும் அமையும்.
வாகன நெருக்கடியால் விநியோகச் சேவைகள் தாமதமடைகின்றமையோடு அதனால் நிதியும் வீண் விரயமாகும்.
தொடருந்து பாதைகள்
அதிவேக வீதிக் கட்டமைப்பு இந்த விரயத்தை குறைக்க உதவும். கொழும்பு நகரின் அபிவிருத்திச் செயற்பாடுகள் எதிர்கால அபிவிருத்திக்கான தேவைகளை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டிருக்காமையும் பிரச்சினையாக காணப்படுகிறது.
மலேசியா – சிங்கப்பூர் போன்ற நாடுகள் வீதிகளை விஸ்தரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளன. ஆனால், கொழும்பில் அதனை செய்ய முடியாதுள்ளது. காலத்துக்கு காலம் கொள்கைகள் மாற்றப்பட்டமையால் தேவையான காணிகளை தக்கவைத்துக்கொள்ள முடியாது போயுள்ளது.
அதனால் கொழும்பு நகரம் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கிறது. அதிவேக வீதிகளுக்கு மாறாக தற்போதுள்ள தொடருந்து வீதிகளை மேம்படுத்தல், தூண்கள் மீதான புதிய தொடருந்து பாதைகளை அமைத்தல், சுரங்க தொடருந்து பாதைகளை அமைத்தல் போன்ற செயற்பாடுகளும் நெரிசல்களை தவிர்க்க உதவியாக அமையும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |