மைத்திரியின் வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மாகாண சபை
மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை தள்ளிப்போடுவதற்காகவே அரசாங்கம் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வருகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.
எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். அந்த தேர்தலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்.
தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க வேண்டும்.
தமிழர்களின் வாக்குகள்
தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாக வந்த மாகாண சபை முறைமையினை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள் ஜே.வி.பியினர்.
அது மட்டுமன்றி தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கினை பிரித்து தனியலகாக மாற்றியவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை.
ஜே.வி.பியினர் தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமானால் தமிழர் பகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டுமானால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை முன்வைக்கின்றார்கள் என்பதை பொறுத்தே நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான உறவுகளையும் முன்னெடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |