பேரினவாதத்தின் நெகிழ்ச்சியற்ற போக்கே திலீபன் சிலை அகற்றம்.. தமிழ் சிவில் சமூக அமைப்பு கடும் கண்டனம்
பேரினவாதத்தின் நெகிழ்ச்சியற்ற போக்கை வெளிக்காட்டி நிற்கின்றது தியாகி திலீபனின் உருவச்சிலை அகற்றம் என தமிழ் சிவில் சமூகம் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று(28.09.2026) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசு தரப்பிலிருந்து அச்சுறுத்தல்
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பேரினவாதத்தின் நெகிழ்ச்சியற்ற போக்கை வெளிக்காட்டி நிற்கும் தியாகி திலீபனின் உருவச்சிலை அகற்றல் நல்லூரில் அமைக்கப்பட்டு பேரினவாதத்தால் உடைக்கப்பட்ட தியாகி திலீபனின் நினைவுத் தூபி இருந்த நினைவிடத்தில், தியாகி திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு நாட்களையொட்டி நிறுவப்பட்ட தியாகி திலீபனின் திருவுருவச்சிலை சடுதியாக இலங்கை பொலிஸாரினால் அராஜகமாக அகற்றப்பட்டுள்ளது.

திருவுருவச் சிலை வைக்கப்பட்ட நாளிலிருந்து அதற்கெதிராகவும் சிலையை அகற்றுமாறும் அரசும் அதன் அதிகார அமைப்புகளும் ஏற்பாட்டாளர்கள் மீது பலத்த அழுத்தங்களை கொடுத்து வந்தார்கள்.
சிலை வைப்பையொட்டி சாதாரணர்களான பேரினவாதிகளாலும் வெட்கமேதுமின்றி கடுமையான இனவாத வன்மமும் கக்கப்பட்டு வந்தன.
தமிழர்களின் உரிமைகள்
கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் பல்வேறு இடங்களிலும் திலீபனின் நினைவு நிகழ்வுகளைக் குழப்பும், மற்றும் அவற்றின் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளில் அரசின் அதிகார அமைப்புகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதேவேளை, மக்களிடையே உள்ள பேரினவாதிகளாலும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான வன்மமும் இம்முறை அதிகளவில் வெளிப்பட்டதை அவதானிக்க முடிந்தது. நாகரிகமும் பகுத்தறிவுமுள்ள எவருக்கும் கவலை தரும் வகையில் இதில் இளையவர்கள் பலரும் காணப்பட்டனர்.
தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையின் மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவரும் இத்தகைய அடக்குமுறைகளையும் வன்மங்களையும் தமிழ் சிவில் சமூக அமையம் எப்போதும் வன்மையாகக் கண்டித்து வருவதுடன் தமிழ் மக்களின் தேசிய உரிமைகளின் ஒரு அங்கமான நினைவு கூரும் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

