இனவாத மோதலுக்கு இடமில்லை..! அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு
இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழாவுக்குரிய ஏற்பாடுகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனவாத மோதலுக்கு இடமில்லை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையான சுதந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிலையான சமாதானம் அவசியம். இதற்கு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படாமல் எம்மால் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. நாட்டில் மீண்டும் இனவாத மோதல் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது.

தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும். உண்மையான சுதந்திரம் நிலைநிறுத்தப்படும். சிறப்பானதொரு நாட்டை உருவாக்கவும், வளமானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.