புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக பிரமாண்ட பேரணி: போராட்டக்காரர்களுக்கு பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை
இன ரீதியான அச்சுறுத்தலைப் பொறுத்துக்கொள்ள முடியாது எனப் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிக்குப் பிரித்தானியப் பிரதமர் கெயர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில், வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, அந்த நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் யுனைட் தி கிங்டம் எனும் பெயரில் லண்டனில் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
பிரமாண்ட பேரணி
இந்தப் பேரணியில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கிடையே ஏற்பட்ட மோதலில், 26 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.இதனையடுத்து, சம்பவத்துடன், தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்குப் பிரித்தானியப் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை
மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது.
இங்கிலாந்து சகிப்புத் தன்மை, பன்முகத்தன்மை, மற்றும் மரியாதை ஆகிய வற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு. நமது கொடி நமது பன்முகத்தன்மையை குறிக்கிறது.
ஆனால் இன ரீதியான மிரட்டலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். மற்றவர்களை மிரட்டுவதன் மூலமாகவோ , அல்லது பணியில் இருக்கும் அதிகாரிகளை தாக்குவதன் மூலமாகவோ அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.



