கிழக்கில் காணி அபகரிப்பை நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்று திரட்டுவோம்: சிறீதரன் விசனம்
கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்புகளை நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கில் மக்களை ஒன்றுதிரட்டி அரசாங்கம் ஒரு பதிலை சொல்லும் நாளை வரவழைப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 49 நாட்களாக மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களால் தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நேற்றையதினம் (02.11.2023) குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரியமாக பரம்பரையாக கால்நடைகளை வளர்த்த காணிகளை வலுக்கட்டாயமாக பறித்து எடுக்கும் முயற்சிகளை சிங்கள மக்கள் முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கு எதிராக 49நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.
தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சி. அந்த முன்னெடுப்புகளில் ஒன்றுதான் மயிலத்தமடு,மாதவனை பகுதி செயற்பாடு. இது இன்று நேற்று அல்ல டட்லி சேனநாயக்க காலத்தில் நினைத்த விடயத்தினை ஜேஆர் காலத்தில் நடைமுறைப்படுத்த முயற்சித்தார்கள்.
தற்போது ஜனநாயகம் பேசிக்கொண்டு நிலங்களை பறித்துக்கொண்டு சிங்கள மயப்படுத்தி கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல்செய்வதில் இந்த அரசாங்கம் பாரிய முனைப்பினை காட்டிவருகின்றது.
இதற்கு எதிராகவே மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஆதரவு வழங்குவது என்பது எங்களது கடமையாகும். இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த போராட்டத்தில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர்,உறுப்பினர் உட்பட பலர் இன்றைய கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.









