தமிழர்கள் விடயத்தில் தலையிட வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திடம் இருக்கிறது! சிறீதரன்
சிங்களவர்களுக்கு முன்பாகவே மூத்தவர்களாக இந்த மண்ணில் வாழ்ந்த நாங்கள் ஏன் எங்களுடைய பண்பாட்டை, எங்களுடைய இன மொழி அடையாளத்தை, எங்களுடைய நிலத்தை நாங்கள் இழக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ். சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தினர் நடத்திய கலைவிழாவில் நேற்றைய தினம் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உலகத்தின் சமாதானத்தோடு தொடர்புபட்டுள்ள பிரச்சினை
மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய பிரச்சினை எமக்கான பிரச்சினை மட்டுமல்ல. அது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குரியது, உலகத்தினுடைய சமாதானத்தோடு சம்பந்தப்பட்டது. உலகத்தினுடைய பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்டது.
இலங்கையில் உள்ள சிங்களவர்களின் இருப்புகளோடு சம்பந்தப்பட்டது. ஒரு இனத்தினுடைய மொழி, அந்த இனத்தினுடைய கலாச்சாரம், அந்த இனத்தினுடைய நிலம், அந்த இனத்தினுடைய பண்பாடுதான் அந்த இனம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்ற கருவி.
நாங்கள் ஒரு தேசிய இனம் என்று கூறப்படுகின்றோம். இந்த மண்ணிற்கு நாங்கள் மூத்த குடிமக்கள், ஈழத்து மண்ணிலே நாங்கள் முதல் தோன்றியவர்கள், பஞ்ச ஈச்சரங்களை வைத்து வரலாறு படைத்தவர்கள், நாங்கள் நாகர்களாக வாழ்கின்றோம்.
பீனிக்ஸ் போன்ற ஒரு இனம்
ஆகவே சிங்களவர்களுக்கு முன்பாகவே மூத்தவர்களாக இந்த மண்ணில் வாழ்ந்த நாங்கள் ஏன் எங்களுடைய பண்பாட்டை, எங்களுடைய இன மொழி அடையாளத்தை, எங்களுடைய நிலத்தை நாங்கள் இழக்க வேண்டும்? நாங்கள் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் எழுகின்ற பீனிக்ஸ் போன்ற ஒரு இனம்.
அதனால் தான் நாங்கள் இன்று உலக நாடுகளிடையே பேசுபொருளாக காணப்படுகின்றோம். ஏன் இலங்கை எங்களோடு பேச வேண்டும்? அவர்கள் பேசாமல் தங்களது வேலையை செய்யலாமே? ஏன் அவர்களுக்கு ஒரு பேச்சுவார்த்தை தேவைப்படுகிறது?
வடக்கு கிழக்கில் இவ்வளவு இராணுவம் இருக்கிறது ஏன் எங்களோடு பேச வேண்டும்?
என்னதான் அடக்கு முறைகள் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும் தமிழர்களது விடயத்தில் தலையிட வேண்டிய ஒரு தார்மீக கடமைகளும் பொறுப்புக்களும் சர்வதேச சமூகத்திடம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.