தமிழக அமைச்சர் வன்னி அரசை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி
தமிழ்நாடு மாநிலத்தின் புதிய சமூக நீதித்துறை அமைச்சரும் நீண்டகால அரசியல் செயற்பாட்டாளருமான வன்னி அரசை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சென்னையிலுள்ள சமூக நீதித்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ அலுவலகத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்யுள்ளது.
இருதரப்பு அரசியல் நிலவரங்கள்
ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துடனும், அவர்களது உரிமைகளுடனும் நீண்டகாலமாகத் தன்னை இரண்டறக் கலந்துகொண்டு குரல் கொடுத்து வரும் ஒரு மூத்த அரசியல் தலைவரான வன்னி அரசு, அண்மையில் தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.

இதனையொட்டி, அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இந்தச் சந்திப்பின் நினைவாகத் தனக்கே உரித்தான பாணியில் முக்கிய வரலாற்றுப் புத்தகம் ஒன்றையும் அமைச்சருக்குப் பாராட்டி வழங்கிவைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நீதித்துறை அமைச்சராகவும், அந்தக் கட்சியின் மாநில விவகாரங்கள் குறித்த கொள்கைக் குழுவின் முக்கிய அங்கத்தவராகவும் அமைச்சர் வன்னி அரசு பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் சுருக்கமாக ஆராயப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.