தையிட்டி போராட்ட களத்தில் பல்கலை மாணவர்கள்: போராட்டம் வலுவடையும் - சிறீதரன் நம்பிக்கை
தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளை மாறி மாறி வரும் அரசுகள் கையாண்டு வருகின்றதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தையிட்டியில் நேற்று (03.01.2026) நடைபெற்ற நில மீட்புப் போராட்டம் தொடர்பில் வழங்கியுள்ள செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் நேற்று நடைபெற்ற நில மீட்புப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு வலுச் சேர்த்துள்ளார்கள். இனிவரும் நாட்களில் இந்தப் போராட்டம் மேலும் வலுவடையும் என நாம் நம்புகின்றோம்.
பௌத்த மயமாக்கல்
வடக்கு - கிழக்கில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வலுக்கட்டாயமாக வைப்பதும், அந்த இடங்களை ஆக்கிரமித்து விகாரைகளை அமைப்பதும், பின்னர் அந்த இடங்களைச் தமக்குச் சொந்தம் என அறிவிப்பதும், அதிலே சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதும், அதனூடாகச் சிங்கள பௌத்த மயமாக்கல்களை ஏற்படுத்துவதும் என மாறி மாறி வரும் அரசுகள் கையாண்டு வருகின்றன.

தையிட்டி நில மீட்புப் போராட்டம் வன்முறைப் போராட்டம் அல்ல. இது அறவழிப் போராட்டம் - உரிமைப் போராட்டம். மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |