முதியோருக்கென தனி பொலிஸ் பிரிவு : மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை
2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதமானோர் முதியோர்களாக மாறுவார்கள் என்பதைக் கருத்திற் கொண்டு, முதியோர் சமூகத்திற்காகத் தனியான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான எல்.டி.பி. தெஹிதெனிய இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
சமூக-பொருளாதார மற்றும் பிற காரணங்களால் நாட்டின் முதியோர் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் மனித உரிமை மீறல்கள் நீண்டகாலமாகக் கவனிக்கப்பட்டு வருவதாகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கொள்ளும் சிக்கலான சூழ்நிலை
இதன் அடிப்படையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அன்றைய பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பான யோசனையை முன்வைத்து கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பராமரிப்பு நிலையங்களிலோ அல்லது வீடுகளிலோ வாழும் முதியோர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சூழ்நிலைகளின் போது, அவர்களுக்கென பிரத்யேக பொலிஸ் பணியகம் இருக்கும் பட்சத்தில், அவர்களது பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் விரைவான தீர்வுகளை வழங்க முடியும் என ஆணைக்குழு நம்புகிறது.

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்காக பொலிஸ் திணைக்களத்தில் தனிப் பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல, உரிய பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்டு முதியோர்களுக்கான தனி பொலிஸ் பிரிவை உருவாக்குவது காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும் எனத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, நாட்டில் 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்துள்ளது. அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டளவில் அந்த வயதைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 51 இலட்சத்து 90 ஆயிரமாக (5,190,000) இருக்கும். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முதியோர் சனத்தொகை 13 இலட்சத்து 45 ஆயிரமாக (1,345,000) அதிகரித்துள்ளது.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri