தமிழ்த் தலைவர்களின் ஆடத்தெரியாத விளையாட்டும் மக்களை ஏமாற்றத் தெரிந்த வழியும்
இலங்கையின் கடந்தகால வரலாற்றில் சிங்கள தலைவர்கள் தமக்கு நெருக்கடி ஏற்படுகின்ற போதெல்லாம் தமது எதிர்த்தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்து கொள்வதும் பின்னர் நெருக்கடி தீர்க்கப்பட்டவுடன் கூட்டுச் சேர்ந்தவர்களின் முதுகில் குத்துவதையுமே வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வாறே சிங்களத் தலைவர்கள் தமிழ் தலைவர்களை அணைத்தும் பின்னர் அவர்களின் முதுகில் குத்துகிற வரலாற்றையும் இலங்கையின் அரசியல் வரலாறு தொடர்ந்து பதிவு செய்கிறது.
இவ்வாறு தமிழ் தலைவர்களின் முதுகில் குத்தப்பட்ட, ஏமாற்றப்பட்ட, தமிழ் தலைவர்கள் ஏமாந்த வரலாற்றை இன்றைய நெருக்கடி கால நிலையில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது.
ஈழத்தமிழர்கள் தமது தவறுகளை மீள்பரிசீலனை செய்யத்தவறின் மீண்டும் மீண்டும் தோற்பது தவிர்க்க முடியாத விதியாகிறது. தமிழர்கள் தொடர்ந்து தோற்கடிக்கப் படுவதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக அணுகத் தவறினால் தமிழினம் தொடர்ந்து கடந்துபோன 100 வருடம் என்ன இன்னும் ஆயிரம் வருடங்களுக்கும் தொடர்ந்து தோற்றுக்கொண்டேதான் இருக்கும்.
இதனை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக அணுகுவதற்கு முயற்சிக்கவும், முன்வரவும் வேண்டும். 1920களில் குடியேற்ற வாதத்திற்கு எதிரான போராட்டம், பிரித்தானியருக்கும் சிங்களத் தலைவர்களுக்கும் இடையேயான முரண்நிலை, பௌத்த மறுமலர்ச்சி, தமிழர் மகா சபை தோற்றம், யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் இந்திய காங்கிரஸ் சார்புநிலை போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டபோது ஈழத்தமிழர்களுடன் 1926ல் மகேந்திரா ஒப்பந்தத்தை சிங்களத் தலைவர்கள் செய்து கொண்டார்கள்.
1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு தமக்குச் சாதகமாக வந்தவுடன் மகேந்திரா ஒப்பந்தம் காற்றில் பறந்து விட்டது. தமிழ் தலைவர்கள் முதற்தடவையாக ஏற்றப்பட்டார்கள்.
1947 இல் சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் சிங்களத் தலைவர்களுக்கு பெரும் தலைவலியாக இடதுசாரிகள் உருவெடுத்தார்கள். இடதுசாரிகளை கருவறுக்கும் அதே சமநேரத்தில் மலையக மக்களின் குடியுரிமையைப் பறிக்கவும், ஈழத்தமிழர்கள் இந்தியாவின் பக்கம் செல்வதை தடுக்கவும் 1947 செப்டம்பர் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களை டி.எஸ் சேனநாயக்கா தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டதன் மூலம் 3 தரப்பினரையும் தோற்கடித்தார்.
தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் பொன்னம்பலத்தை வைத்துக் கொண்டு சிங்கள மொழிச் சட்டத்தை கொண்டு வருவதற்கான அடித்தளங்களை இட்டதோடு மாத்திரமல்லாமல் தமிழர் தாயக நிலத்தை கபளீகரம் செய்வதில் முதல் வெற்றியைப் பெற்றுக் கொண்டார். பின்னர் சேர் ஜோன் கொத்தலாவலையால் நெருக்கடி கொடுக்கப்பட்டு ஜி.ஜி அமைச்சரவையில் இருந்து வெளியேறவும் வழி செய்தார்.
1956ஐ தொடர்ந்து வந்த பண்டாரநாயக்கா அரசாங்கமானது கல்லூரிகள், பாடசாலைகளை தேசிய மயமாக்கல் கொள்ளையினால் கிறிஸ்தவ மிஷனரிகளுடனான நெருக்கடிகள், அரிசி மற்றும் அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான கோட்டா நடைமுறையில் விமல விஜயவர்த்தனவுக்காக புத்திரர கித்தர தேரர் கோட்டா உரிமம் கோரியதனால் கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகள், பெருந்தோட்டங்களை தேசிய மயப்படுத்தல் போன்றவற்றினால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தந்தை செல்வாவை அரவணைத்து பண்டா-செல்வா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் (சமஷ்டிக் கட்சி) கொள்கைப் பிரகடனமான "சமஷ்டி" கோரிக்கையிலிருந்து விலகி அதிலும் கீழ்ப்பட்ட பிராந்திய சபைகள் உருவாக்குவது என்ற உடன்பாட்டுடன் பண்டா-செல்வா ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
நெருக்கடிகள் தீர்ந்தவுடன் பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டனர் இடதுசாரிகளின் நெருக்கடிகளில் இருந்தும், அதே நேரத்தில் 1965 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறாததனால் தமிழரசுக்கட்சி(13 ஆசனம்) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி (3 ஆசனம்) இரண்டையும் இணைத்து ஆட்சி அமைக்க முற்பட்ட டட்லி சேனநாயக்கா “டட்லி-செல்வா ஒப்பந்தத்தை” உருவாக்கி தமிழர்களை அணைத்துக் கொண்டார்.
டட்லி செல்வா ஒப்பந்தம் என்பது சமஷ்டியை விடுத்து பிராந்திய சபை ஏற்றுக்கொண்டதாகும். இது நிலம் சார்ந்து அல்லது பிரதேசம் சார்ந்த ஒரு தீர்வில் இருந்து முற்றிலும் இறங்கி பிராந்திய அபிவிருத்தி சபை உருவாக்குதல் என்பதுதான் அந்த ஒப்பந்தமாகும்.
அவ்வாறு மிகக்குறைந்த அற்பமான தீர்வுக்கு இறங்கி வந்த தமிழ்த் தலைமைகளை அனைத்து கொண்ட டட்லி சேனநாயக்கா தொடர்ந்து தனது ஆட்சிக்காலம் முடியும் வரைக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடித்து தமிழ் தலைவர்களின் முதுகில் குத்திவிட்டார்.
அது மாத்திரமல்ல தனித் தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரானதாக தொடுக்கப்பட்ட கோடீஸ்வரன் வழக்கையும் தமிழர்களை வைத்துக் கொண்டு இழுத்தடித்து முடக்கினர். அதேநேரத்தில் பசுமைப்புரட்சி என்ற பெயரில் டி.எஸ் சேனநாயக்கா உருவாக்கிய கல்லோயா சிங்களக் குடியேற்றத் திட்டம் ஸ்தாபிதம் அடைவதற்கான அனைத்து வித்தைகளையும் மேற்கொண்டு இறுதியில் இரண்டு தமிழ் கட்சிகளும் எல்லா வகையிலும் ஏமாற்றப்பட்டனர்.
1981ஆம் ஆண்டு ஜெயவர்த்தன அடுத்து வரும் பொதுத் தேர்தலை நடத்தாமல் மக்கள் கருத்துக் கணிப்பை வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தொடர்ந்து தனது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் வைத்து இருப்பதற்காக அமிர்தலிங்கத்தை அணைத்து மாவட்ட அபிவிருத்தி சபையை உருவாக்குவோம் என்று என்று கூறி கூட்டு சேர்த்துக் கொண்டார்.
பின்னர் நெருக்கடி தீர்ந்தவுடன் அமிர்தலிங்கத்தை கைவிட்டுவிட்டார். இந்தக் கூட்டுச்சேர்வு பிற்காலத்தில் அமிர்தலிங்கத்தின் உயிருக்கு தூக்குக் கயிறாக மாறிப் போயிற்று என்பதையும் வரலாறு பதிவு செய்கிறது.
இவ்வாறுதான் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் சிங்கள தேசத்தில் ஏற்பட்ட ஜே.வி.பி நெருக்கடியில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கும் இந்தியப்படையை வெளியேற்றுவதற்கும் பிரேமதாச விடுதலைப்புலிகளை பேச்சுக்கு அழைத்து அணைத்துக் கொண்டார்.
அவ்வாறு சந்திரிகா குமாரதுங்க ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு புலிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்தார்.
அதன்பின் 2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை பிடிக்கவும், தக்கவைக்கவும் புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்திற்கு முன்வந்தார். இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் சிங்கள தலைவர்களுடைய ஆட்சி, அதிகாரங்களை தக்கவைப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டன.
தமது நெருக்கடிகள் தீர்ந்த போது புலிகளுடனான பேச்சுவார்த்தையும் ஒப்பந்தங்களையும் மீறிச் சிங்களத் தலைவர்கள் செயற்பட்டார்கள் என்பதையும் வரலாறு பதிவு செய்யத் தவறவில்லை. அவரை 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிங்களத் தலைவர்கள் அரவணைத்தார்கள்.
அன்றைய காலத்தில் போர்க்குற்றம், இனப்படுகொலை என சர்வதேச ரீதியாக எழுந்த பெரும் அழுத்தங்களையும், நெருக்கடிகளையும் தீர்ப்பதற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை அனைத்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினர். உருவாக்கி நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்பவற்றிலிருந்து இலங்கை அரசை பாதுகாப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்துவிட்டனர்.
அந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும், எந்த நியாயத்தையும் வழங்காமல் காலத்தை இழுத்தடித்து ஏமாற்றி விட்டனர். அதன் தொடர்ச்சிதான் இன்று இலங்கையில் பொருளாதார நெருக்கடியும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் உள் நிலவினால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியும், இலங்கைத் தீவில் சீனாவின் உள்நுழைவு அதிகரித்திருப்பதால் ஏற்பட்டிருக்கின்ற மேற்குலக அழுத்தங்களையும் போக்குவதற்கு அல்லது அதிலிருந்து மீள்வதற்கு இன்று தமிழ் தலைமைகள் சிங்கள தலைவர்களுக்கு தேவைப்படுகிறார்கள்.
இப்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது ஒரு தற்காலிகமான வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு பொருளாதார நெருக்கடியாகும். ஏன் இப்பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து செல்ல வைக்கப்படுகிறது? அல்லது முன்னிலைப்படுத்த படுவதற்கான காரணம் என்ன? இதற்கான காரணம் மிக ஆழமானது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முற்படுவது மாத்திரமல்ல இலங்கைக்குள் அது மிக ஆழமாக வேரூன்ற தொடங்கிவிட்டது. இவ்வாறு இலங்கைக்குள் சீனாவின் வருகையை மேற்குலகம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மிகவும் கடுமையாக எதிர்க்கின்றது.
இந்த இந்திய மேற்குலக நெருக்கடியை பின் தள்ளுவதற்கு புதியதொரு பிரச்சினையை முன்னே கொண்டு வர வேண்டும். அந்த அடிப்படையில்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வேண்டுமென்றே முன்னே கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இந்த பொருளாதார நெருக்கடியை வெளியுலகத்துக்கு காட்டிக்கொண்டு சீனாவை இலங்கையில் வலுவாக காலூன்ற செய்வதுதான் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தந்திரோபாயமாகும். இந்த நெருக்கடியில் இருந்து தப்புவதற்கான தந்திரோபாயத்தில் வெற்றி பெறுவதற்காக எந்தப் பெரிய நெருக்கடியின் விளிம்பு நிலைக்கும் செல்வதற்கு சிங்களப் பேரினவாதம் தயாராகவே இருக்கிறது.
இதனை இந்த வாரம் கொழும்பில் நடந்த பெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காணமுடியும். மக்களுக்கு எரிவாயு இல்லை. எண்ணெய் இல்லை. பால்மா இல்லை. பாவானும் இல்லை. பருப்பும் இல்லை என மக்கள் கோஷம் இடுகிறார்கள்தான், மக்கள் கொதிக்கிறார்கள்தான் இந்த கொதிப்புகளையெல்லாம் தொடர்ந்து குறிப்பிட்ட காலம் நீடிக்க வைத்து விட்டு தனது நெருக்கடிகள் தீர்ந்தவுடன் சீனாவிடம் கடனை பெற்று பொருட்களை சந்தைக்கு இறக்கி விடுவார்கள்.
அது மாத்திரமல்லாமல் இந்தியாவும் மேற்குலகமும் தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப் பார்த்தார்கள் அல்லது தமிழர்களுக்கு பக்கம் நிற்பதற்காக சிங்களவர்களை இவ்வாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கவைத்து விட்டார்கள் என்று கதை விடுவார்கள்.
அதனை சிங்கள ஊடகங்களை வைத்தே வாய்கிழிய கத்தவும் செய்வார்கள் இதன்மூலம் சிங்கள மக்களை மீண்டும் ஓரணியில் திரட்டி தமது அரசை பலப்படுத்தி விடுவர். இப்போது இந்திய மேற்குலக நெருக்கடி என்கின்ற பெரிய பூதத்தை பின் தள்ளி முடக்குவதற்காக பொருளாதார நெருக்கடி என்கின்ற சின்ன பூதத்தை முன்னே விட்டிருக்கிறார்கள்.
பெரிய பூதம் அகற்றப்பட்டவுடன் சின்னப்பூதத்தை தாமே அகற்றி விடுவார்கள். இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை என்பது உற்பத்தி சார்ந்த பிரச்சினை அல்ல. பொருட்களை கொள்வனவு சார்ந்த பிரச்சினை மாத்திரமே. இதனை வெளிநாட்டுக் கடனை பெற்றுவிட்டால் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் மக்களின் பிரச்சினையை தீர்த்து விடலாம்.
ஆனால் தீர்க்கக்கூடிய பிரச்சினையை முதற்தர பிரச்சினையாக முன்னிலைப்படுத்தி விஸ்வரூப்படுத்தவே சிங்கள அரசு விரும்புகிறது. இப்போது இந்தப் பொருளாதார பிரச்சினை என்பது இன்றைய அரசாங்கத்தின் அரசியல் தந்திரோபாயமாகும்.
எனவே இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு அரசியல் தந்திரோபாய தோற்றுவிப்பாகும் என்பதனை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது எழுந்திருக்கின்ற மேற்குலக அழுத்தம் என்ற முதல் பிரச்சினையை சிங்களத் தலைமைகள் வெற்றி கொள்வதற்காகவே மார்ச் 17ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்காக கோட்டாபய அரசால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்தப் பேச்சுவார்த்தை நடக்காவிட்டாலும் அது பிற்போடப்பட்டிருக்கிறது. இங்கே தமிழ் தலைமைகளை ஒரு பலமான நிலையில் இருந்துகொண்ட சிங்கள ஆளுங்கட்சி அழைத்து அரவணைக்க முற்படுகிறது என்றால் அவர்கள் தமிழர்களின் முதுகில் மீண்டும் குத்துவதற்கு தயாராகி விட்டார்கள் என்றே அர்த்தப்பட வேண்டும்.
எனவே சிங்களத்தின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கத்தான் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமானது.
முன்நிபந்தனைகளாக
1) தமிழர் தாயகம் சார்ந்த நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்
2) தமிழர் பிரச்சினையை அணுகுவதற்கு ஆறாம் திருத்தச் சட்டம், பயங்கரவாதத் திருத்தச்சட்டம் என்பவற்றை அகற்றுவதற்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.
3) இந்தப் பேச்சுவார்த்தையை கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் சர்வதேச கண்காணிப்பாளர் குழுவொன்றை நியமிக்க வேண்டும். அதனை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க்க வேண்டும்.
இந்த நிபந்தனைக்கு உட்பட்ட நாம் பேச்சுவார்த்தைக்கு தயார் என தமிழ்த் தரப்பு அறிவிப்பது தான் இன்றைய அரசியல் பொருளியல் கொதிநிலையில் தமிழர் தரப்பிற்கு பலம் சேர்க்க வல்லது.
தமிழ் தரப்பை பொறுத்தவரை போர்க்காலத்தில் போராடுவதில் வல்லவர்கள் ஆனால் அரசியல் களத்தில், பேச்சுவார்த்தை களத்தில் ஆடுவது என்பது தமிழர்களை பொருத்த அளவில் மிகக் கடினமானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. எனவே இந்த பேச்சுவார்த்தை களத்தில் ஆடுவதற்கு தமிழ் தலைமைகள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளவேண்டும்.
பேச்சுவார்த்தை
என்ற பெயரில் தாமும் ஏமாந்து தமிழ் மக்களையும் ஏமாற்ற தெரிந்த தமிழ் தலைமைகள் இனியாவது விழிப்பாக இருந்து
சிங்களத் தலைவர்களுடன் எவ்வாறு அரசியல் சதுரங்கத்தில் ஆடவேண்டும் என்பதை கற்றுக்கொள் வேண்டும் என வரலாறு
கட்டளையிடுகிறது.
கட்டுரை : தி.திபாகரன்.M.A