எமது கடல் வளத்தை அந்நிய தேசங்களுக்கு விற்பதற்கு அனுமதிக்க மாட்டோம்: என்.எம்.ஆலம்
''எமது மக்களுக்கு சொந்தமான கடல் வளத்தை அந்நிய தேசங்களுக்கு விற்பதற்கு அனுமதிக்க மாட்டோம்'' என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாச செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று(11) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"இந்திய கடற்றொழிலாளர்கள் வருகை என்பது பல வருடங்களாக பேசப்பட்டு வருகின்றது. இவர்கள் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை பயன்படுத்தி எமது கரையோரங்களில் உள்ள வளங்களை கூட சூறையாடி செல்கிறார்கள்.
கோரிக்கை
இது தொடர்பாக ஏற்கனவே நாங்கள் முறையிட்டும் தான்தோன்றித் தனமாக செயற்பட்டு, நீண்ட காலமான எமது கோரிக்கையை அவர்கள் செவிமடுப்பதாக தெரியவில்லை.
நாங்கள் இன்றைய தினம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கின்றோம். தயவு செய்து எமது வளங்களை எமது மக்களுக்காக விட்டு வையுங்கள்.
எமது வளங்களை நீங்கள் அள்ளிச் செல்வதால் எமது மக்கள் மீண்டும் மீண்டும் பட்டினி சாவை எதிர்கொள்கிறார்கள்.
வட பகுதியில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தை பொருத்தவரையில் எரிபொருள் அற்ற
நிலையில் மாதக்கணக்காக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில்
இருக்கிறார்கள்.
இதனால் கடலில் போடப்பட்டுள்ள அவர்களுடைய வலைகளை கூட கரைக்கு கொண்டு வர முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
மேலும், வடக்கின் பல பகுதிகள் அந்நிய தேசத்தவர்களுக்கு விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
கடற்றொழிலாளர்கள் சமுதாயத்தின் மீன்பிடி பிரச்சினை தொடர்பான சம்பவங்களை கையாளும் போது அவர்களின் ஆலோசனைகளை கேட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.
எச்சரிக்கை
எதிர் காலத்தில் இங்கு உள்ள அரசியல் தலைமைத்துவங்கள் இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை அந்நிய நாட்டிற்கு விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் .
அவ்வாறு ஒரு நிலை வருமாக இருந்தால் இலங்கை தேசத்தில் தற்போது ஒரு சம்பவம் நடந்தது போன்று வடமாகாணத்தில் இவ்வாறு ஒரு சூழ்நிலை உருவாகும் என்று இந்த நேரத்தில் எச்சரிக்கை விடுக்கின்றோம்'' என கூறியுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட கடற்தொழில் சங்கங்களின் சமாச தலைவர் ஜஸ்ரின் சொய்சா, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொருளாளர் அன்ரனி சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.



