ஆரம்பப் பாடசாலை மாணவி ஒருவரின் அதிர்ச்சி செயல்
நாரம்மல பிரதேசத்தில் உள்ள முன்னணி ஆரம்பப் பாடசாலையொன்றில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் (14.08.2023) பதிவாகியுள்ளது.
மாணவர் தலைவர் பதவிக்கான போட்டியின் போது, போட்டியாளர்களில் ஒருவரான மாணவி, ஏனைய ஐந்து மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் விஷம் கலந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
விஷம் கலந்த நீரை அருந்தியதையடுத்து, தரம் 10 ஆம் வகுப்பு மாணவிகள் வாந்தி எடுக்க ஆரம்பித்த போதே இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. மேலும் விஷத்தை தண்ணீரில் கலந்த சிறுமியும் அந்த நீரை சிறிதளவு குடித்துள்ளார்.
சீரான நிலையில் மாணவிகள்
விசாரணைகளின்படி, குறித்த மாணவி, காலை ஒன்றுகூடலை தவிர்த்துவிட்டு வகுப்பறையில் தங்கியுள்ளார். இதன்போதே அங்கு அவர் தனது சக மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் விஷம் கலந்துள்ளார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட 6 பாடசாலை மாணவிகளும் உடனடியாக நாரம்மல பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதேவேளை குடிநீரில் கலக்கப்பட்ட இரசாயனம் அதிக நச்சுத்தன்மையற்றது எனவும் சிகிச்சை பெற்ற 6 மாணவிகளும் தற்போது சீரான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |