தாய்நாட்டிற்காக மீண்டும் ஆயுதம் ஏந்துவேன்..! ட்ரம்பிற்கு கொலம்பிய ஜனாதிபதியின் சவால்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, தனது தாய்நாட்டின் இறையாண்மையைக் காக்க மீண்டும் ஆயுதங்களை ஏந்தத் தயார் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ அதிரடியாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டதை அடுத்து, கொலம்பியாவிற்கும் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்காவுக்கும் கொலம்பியாவுக்குமான உறவு
"கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ ஒரு நோய்வாய்ப்பட்டவர், அமெரிக்காவிற்கு கொகேய்ன் கடத்துவதையே அவர் விரும்புகிறார்" என ட்ரம்ப் தனிப்பட்ட ரீதியில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பெட்ரோ "நான் மீண்டும் ஆயுதம் ஏந்த மாட்டேன் என ஏற்கனவே சபதம் செய்திருந்தேன்.
ஆனால், தாய்நாட்டிற்காக அந்தச் சபதத்தை முறித்து மீண்டும் ஆயுதம் ஏந்தவும் தயங்கமாட்டேன். நான் போதைப்பொருள் கடத்தல்காரன் அல்ல. எனது வங்கிக் கணக்கு விபரங்கள் வெளிப்படையானவை.
என்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்ய முயன்றால், எனது மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அமெரிக்காவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான உறவை முறிக்க ட்ரம்ப் முயல்கிறார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஒரு "சட்டவிரோத அச்சுறுத்தல்" என பெட்ரோ வர்ணித்துள்ளார். மதுரோவின் கைதைத் தொடர்ந்து கொலம்பிய ஜனாதிபதியின் இந்த ஆவேசமான அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |