விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு
இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
விசா வழங்கும் நடைமுறை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமையால் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து அந்தச் செய்முறையை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல்
இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விடுத்துள்ள அறிக்கையில்,
VFS நிறுவனத்துக்கு விசா வழங்கும் வசதி வழங்கப்பட்டதால், மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி, கடந்த 24 மணி நேரத்திற்குள், பழைய முறைப்படி விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் எளிதாக விசா பெற்றுக்கொள்ள முடியும். வெளிநாட்டிவர்கள் இப்போது ஒன்லைனில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும்.
மேலும், VFS நிறுவனத்திற்கு இதனை வழங்கியதால் ஏற்பட்ட முறைகேடு குறித்து உடனடியாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ள ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அந்தக் கணக்காய்வின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.