யாழில் எரிபொருள் அட்டை நடைமுறையின் கீழ் எரிபொருள் வழங்க தீர்மானம்
யாழில் எரிபொருள் அட்டை நடைமுறையின் படியே எரிபொருள் வழங்கப்படும் என நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வைத்தியலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வகையில் புதிய எரிபொருள் அட்டை நடைமுறையின்படி எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வழங்கப்படும் நாட்கள்
அந்தவகையில், கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரம் நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட J288 தொடக்கம் J300 வரையான கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவுள்ளது.
மேலும்,எதிர்வரும் திங்கட்கிழமை J-288, J-289, J-290, J-291 ,J-292, J-293, J-294 ஆகிய கிராம சேவகர் பிரிவிற்கும்,செவ்வாய்க்கிழமை J-295, J-296 ,J-297,J-298, J-299, J-300 ஆகிய கிராம சேவகர் பிரிவிற்கும் எரிபொருள் வழங்கப்படும்.
அத்துடன் மேல் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் எரிபொருள் அட்டை பெற்றுக்கொள்ளாது இருந்தால் தங்களது கிராம சேவகரை தொடர்புகொண்டு எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எரிபொருளினை பெற்றுக்கொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
குறித்த கிராம சேவகர் பிரிவில் எரிபொருள் அட்டையினை பெற்று எரிபொருளினை பெற்றுக்கொண்டவர்களுக்கு மீண்டும் எரிபொருள் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு எதிர்வரும் நாட்களில் படிப்படியாக எரிபொருட்கள் வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறைகளுக்கமைய, கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையை கொண்டு வருபவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.



