நாட்டின் சில இடங்களில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(Video)
நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுபாடு நிலவும் நிலையில் இன்று சில இடங்களில் எரிபொருள் விநியோகம் சீராக இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார்
மன்னாரில் நானாட்டான், மாந்தை, முசலி போன்ற ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கான எரிபொருள் விநியோகம் சீராகவும் விரைவாகவும் எரிபொருள் அட்டையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர் ஸ்டான்லி டிமல் வழிநடத்தலில், நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தலைமையில் முருகன் ஐ.ஓ.சி.யில் நிலையத்தில் இன்று பெட்ரோல் வழங்கும் நடவடிக்கை சீராக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீரான முறையில் முன்னெடுப்பு
இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நேர விரயம் செய்யவில்லை என்று எரிபொருள் பெற்றுக்கொண்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் வழங்கும் செயற்பாடுகளின் போது அடையாளப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர்கள், முருகன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர், பொலிஸார் ஆகியோர் தங்களுடைய கடமைகளை மேற்கொண்டுள்ளனர்.
இனி வரும் காலங்களில் இதன் அடிப்படையிலேயே எரிபொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: ஆஷிக்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் அறுவடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக இன்று(16) எரிபொருள் வழங்கும் பணிகள் நிலைய உரிமையாளர் மு.செல்வராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் சிறுபோக வேளான்மை சுமார் 80ஆயிரம் ஏக்கரில் செய்கை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதால் விவசாய நடவடிக்கைகள் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது.
எரிபொருள் இல்லாத காரணத்தினால் அவற்றில் பெரும்பாலான வயல்கள் அறுவடை செய்யமுடியாமல் அழிவடையும் நிலையில் காணப்படுகின்றது.
இதனால் அறுவடையினை முன்னெடுப்பதற்கு 125000லிட்டர் டீசல் தேவைப்படும் நிலையில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரால் கரடியனாறு விதை உற்பத்தி நிலையத்திற்கு சுமார் 2000லிட்டர் டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் விவசாயிகளின் அறுவடைக்காக 10ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரால் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி பணிப்பாளர் உட்பட விவாசய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வின்போது கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி: குமார்
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுகாதார சேவையினருக்கு எந்த இடையூறும் இல்லாமல் எரிபொருள் அட்டை பதிவுடன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
விமானப்படையினர் மற்றும் பொலிஸார் உதவியுடன் இந்த எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
மாவட்டத்தின் பொது வைத்தியசாலையின் சுகாதார சேவையினர்களின் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் போன்ற வாகனங்களுக்கு பரந்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
செய்தி: யது







