வடகிழக்கில் இரு சமூகம் இல்லாமல்போகும் அபாயம் : இரா.சாணக்கியன்
நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் ஆடம்பரமான சுதந்திர தினம் தேவையா எனவும் பொருளாதார ரீதியாக பிச்சையெடுத்து திரியும் ஒரு நாட்டில் ஆடம்பரமான சுதந்திர தினம் ஒன்று நடத்தியிருக்க வேண்டியதில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வடகிழக்கில் உள்ள தமிழ்-முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஒன்றாக வாழவேண்டும் என்பதை சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் அவ்வாறு இல்லாமல்போனால் வடகிழக்கில் இரு சமூகமும் குறிப்பிட்ட காலப்பகுதியில் இல்லாமல்போகும் அபாயம் உருவாகும்.
அண்மையில் திருகோணமலை சண்முகா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நான் கூறியதாக தெரிவித்து முகநூல்களில் பல தவறான கருத்துகளை அரசியல் நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் வெளியிட்டுவருகின்றனர். நான் கூறாத விடயங்களை கூறியதாக வெளியிட்டுவருகின்றனர்.
திருகோணமலை சண்முகா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் என்ன நடைபெற்றது என்பதை முழுமையாக அறியாமல் முகநூலிலும் பதியப்படாத இணையத்தளங்களிலிருந்து வெளியாகும் கருத்துகளையும் வைத்துக்கொண்டு எந்த கருத்தினையும் நாங்கள் தெரிவிக்கமுடியாது.
திருகோணமலை சண்முகா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.அதன் மூலம் உண்மைநிலை அறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
இந்த விடயத்தினை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதை இரு சமூகங்களை சேர்ந்தவர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும். திருகோணமலை வலயத்திற்குள் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும்போது அதனை அந்த வலயத்திற்குள் தீர்க்க முடியும்.
அதனைவிடுத்து இதனை தேசிய ரீதியாக இரு இனங்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் இதனை முன்கொண்டு செல்வது என்பது மிகவும் வேதனையான விடயம். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்த அறிக்கையினை நான் வரவேற்கின்றேன்.
இரு சமூகங்களுக்கிடையே இதனைக்கொண்டு பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது என தெரிவித்திருந்தார். இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்களும் இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் வாழும் அனைத்து இனங்களும் தங்களது உரிமைகளை பேணக்கூடிய வகையில் வாழும் நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. அனைத்து இன மக்களும் தங்களது உரிமைகளை சமனாக கொண்டு செல்லும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.
வட கிழக்கில் உள்ள இரு சமூகமும் எவ்வாறு இணைந்து வாழவேண்டும் என்பது குறித்து சிந்தித்துசெயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் குறிப்பிட்ட காலப்பகுதியில் வடகிழக்கில் இரு இனங்களும் இல்லாமல் போகும் அபாய நிலையே உருவாகும். இதனை மனதில் கொண்டு நாங்கள் நடக்க வேண்டும்.
ஒரு சிலர் இந்த விடயத்தினை அரசியலாக்கி இரு இனங்களிடையே தேசிய மட்டத்தில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை முன்வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
நேற்றைய தினம் ஊடகவியலாளர் ஒருவருக்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடாது என்ற தடையுத்தரவினை வழங்கியிருந்தனர். அவ்வாறான நிலையில் ஜனாதிபதி எவ்வாறு ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து பேசமுடியும்.
நேற்றைய சுதந்திர தினத்தினை தமிழர்கள் கறுப்பு நாளாகவே பார்க்கின்றார்கள்.இந்த நாட்டில் அனைத்து சமூகத்திற்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை.எங்களது மத வழிபாட்டுக்கே இந்த நாட்டில் தடைவிதிக்கப்படுகின்றது என்பதை சர்வதேசத்திற்காக காட்டுவதற்காக நாங்கள் குருந்தூர்மலைக்கு சென்றிருந்தோம்.
அங்குசென்றபோது அப்பகுதியில் கட்டிட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. தொல்பொருட்கள் என்று சொன்னால் தொல் பொருட்களை பாதுகாக்கமுடியுமே தவிர புதிதாக கட்டமுடியாது. நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழர்கள் சென்று வழிபாடுசெய்யமுடியாத நிலையில் தமிழர்கள் எவ்வாறு இந்த நாட்டில் முதலீடுகளை செய்ய முடியும்.
தமது பூர்வீக நிலங்களிலேயே வழிபாடுகளை தமிழர்கள் செய்யமுடியாத நிலையில் தமிழர்களின் முதலீடுகளை இந்த அரசாங்கம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். அரசாங்கம் மக்களை அர்ப்பணிக்குமாறு கூறும்போது முதலில் அரசாங்கம் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும்.
நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் ஆடம்பரமான சுதந்திர தினம் தேவையா, பொருளாதார ரீதியாக பிச்சையெடுத்து திரியும் ஒரு நாட்டில் ஆடம்பரமான சுதந்திரதினம் ஒன்று நடத்தியிருக்கவேண்டியதில்லை. ஜனாதிபதி அவர்கள் முதலில் அர்ப்பணிப்புகளை செய்ய பழகவேண்டும்.
இன்று பல இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பலர் என்ன செய்கின்றார்கள் என்பதே தெரியாது.
இராஜாங்க அமைச்சின் அலுவலகங்களுக்கு பெருமளவான நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்படுகின்றபோதிலும் அந்த அமைச்சின் மூலம் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கின்றதா என்பது கேள்வியாகவேயுள்ளது.
அரசாங்கம் அர்ப்பணிப்புகளை செய்யாமல் மக்களுக்கு தேநீர் குடிக்கும்போது பால் இல்லாமல் குடிங்கள் என்று யாரும் சொல்லமுடியாது. அர்ப்பணிப்புகளை மக்கள் செய்வதாகயிருந்தால் ஜனாதிபதி,பிரதமர் தொடக்கம் அமைச்சர்கள் தொடக்கம் அர்ப்பணிப்புகளை செய்து முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டும்.
இந்த மோசமான ஆட்சியை மக்கள் வீதியில் அடித்து விரட்டாத வகையிலான அர்ப்பணிப்பை இன்று மக்கள் செய்கின்றார்கள். ஊடக சுதந்திரத்தினை நாங்கள் மதிக்க வேண்டும். ஊடகங்கள் தமது கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கு நாங்கள் வழியேற்படுத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.