பொருளாதார நெருக்கடியின் உச்சம்!பிள்ளைகளை சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் ஒப்படைக்கும் பெற்றோர்
நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதெனத் தெரிவித்து சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில், பெற்றோரால் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு சடுதியாக அதிகரித்துள்ளது.
அதிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான பிள்ளைகள் அப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பெற்றோரால் பராமரிக்க முடியாது சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டு 281 ஆக காணப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி உச்சம்
2019 ஆம் ஆண்டு 259 ஆகக் குறைவடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு 174ஆக அது வீழ்ச்சியடைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு 158 ஆக அந்த எண்ணிக்கை மிகப் பெரிய சரிவைக் கொண்டுள்ளது.
ஆனால், பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நடப்பு ஆண்டில் முதலாவது அரையாண்டில் மாத்திரம் 246 பேர் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 124 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 45 பேரும், மன்னார் மாவட்டத்தில் 7 பேரும், வவுனியா மாவட்டத்தில் 8 பேருமாக 246 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர் இல்லங்கள்
இந்தச் சடுதியான எண்ணிக்கை அதிகரிப்புக்கான காரணம் தொடர்பில் வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் இ.குருபரன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, "பொருளாதார நெருக்கடி காரணமாகவே பெற்றோர் தம்மால் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாது என்று கூறுகின்றனர்.
எமக்குக் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு கோரிக்கை
தொடர்பிலும் கலந்துரையாடல் நடத்தப்பட்டு உண்மையில் பெற்றோரால் பராமரிக்க
முடியாதுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே, வடக்கு மாகாணத்திலுள்ள
பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர்" -
என்றார்.