இலங்கையில் டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள வைத்தியர்
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனையொன்றை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெளிநாட்டில் உள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தனியான விடுதியொன்றை உருவாக்குவதே டொலரைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழியாகும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர்களை கண்டுபிடிப்பதற்கான யோசனைகள்
இதற்கு மேலதிகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பிரதேசத்தில் வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியான வைத்தியசாலையை உருவாக்குவது அல்லது நாட்டில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் தனியான விடுதிகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது டொலர்களை கண்டுபிடிக்க வழி வகுக்கும்.
மேலும், இலங்கை மாணவர்கள் மருத்துவம் மற்றும் ஏனைய கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டில் டொலர்களை மிச்சப்படுத்த முடியும் எனவும்,இதற்கான வசதிகளை ஏற்படுத்துவதே இதற்கு தீர்வாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர வெளிநாட்டு மாணவர்களுக்காக இலங்கையில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதன் மூலமோ அல்லது உள்ளூர் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கென தனியான துறைகளை நிறுவுவதன் மூலமோ பெரும் தொகை டொலர்களை சம்பாதிக்க முடியும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதனை கருத்திற்கொண்டு இந்த நாட்டில் தேவையான சில மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்ய தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் டொலர்களை சேமிப்பதற்கான மற்றொரு சிறந்த வழியாக அமையும் என்றும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.