சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி விவகாரம்! நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் உண்மையான நோக்கம் சனல்-4 ஊடகத்துக்கு இல்லையென நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இணையதளத்தில் வெளியிடப்பட்ட காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், குறித்த ஆவணப்பதிவு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராணுவ உளவுத்துறை
சனல்-4 ஊடகம் கடந்த காலங்களில் இருந்தே புலம்பெயர் தமிழர்களுடன் சிறந்த உறவுகளை கொண்டிருந்தது.
ஒரு ஊடகம் தம்மை பிரபலமாக்கிக் கொள்வதற்கு தேவையான விளம்பரத்தை மேற்கொள்ளும்.
அவ்வாறே சனல்-4ம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்பதிவை வெளியிட்டுள்ளது. தற்போது, முழு உலகும் சனல்-4வை பற்றி பேசுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பது இந்த ஊடகத்தின் நோக்கமல்ல.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) செய்தித் தொடர்பாளர் அசாத் மௌலானா, சனல் 4 இல் முன்னிலையாகி, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சல்லே ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மௌலானா வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளதோடு சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |