தவறான இணையமுறையால் உள்நாட்டு வருவாய்த் துறையின் வரி வருவாய் இலக்குகளில் நிச்சயமற்ற நிலை
தவறான இணையமுறை (ஒன்லைன் அமைப்பு) காரணமாக 2023 ஆம் ஆண்டிற்கான, உள்நாட்டு வருவாய்த் துறையின் வரி வருவாய் இலக்குகளில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஒன்லைன் திட்டத்தை மேம்படுத்த 8 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்ட நிலையில், திறைசேரி அதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
எதிர்பார்த்த வருமானம்
திணைக்களத்திற்கு ஒரு டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஒன்லைன் திட்டத்தை மேம்படுத்தாமல் எதிர்பார்த்த வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியாது என அரச அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக இத் திட்டத்தில் பிரச்சினை காணப்படுகின்றது.
தற்போது திணைக்களத்தின் கணினியில் வரி அறிவிப்புகள் உருவாக்கப்படவில்லை. வரி மற்றும் வரிக் கடன் பற்றிய தகவல்களையும், தேவைகளுக்கு ஏற்ப அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
வட் வரியைக் கணக்கிடுவதற்கான உள்ளீடுகள் மற்றும் வெளியீடுகளின் பொருந்தாத நிலையால் சிரமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நிறுவன உதவி
இந்நிலையில் திணைக்களம் மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு (ஆர்ஏஎம்ஐஎஸ்) என்பன திட்டத்தை மேம்படுத்த சிங்கப்பூர் நிறுவனத்தை நாடியுள்ளன.
கணினி கட்டமைப்பை நிறுவுவதற்கு ஏற்கனவே 8 பில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதும் அதில் பயன் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் வரி கோப்புகள் குவிந்து வருகின்றன.
இந்த கணினி குறைபாடுகள் காரணமாகத் திணைக்களம் தற்போது சுமார் 700,000 கோப்புகளை கையேடு முறையாகவே கையாண்டு வருகிறது.
எனவே இந்தமுறையில் வரி சேகரிப்பை மேற்கொண்டு புதிய இலக்கை அடையமுடியாது என்று அதிகாரிகளும் தொழிற்சங்கத்தினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்



