அண்மைய கைது நடவடிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் தன்னிச்சையான கைதுகள், முறையான பிடியாணைகள் இன்றி கைதுகள், சோதனைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் நாட்டில் முறையான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவத்தை சட்டத்தரணிகள் சங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.
இந்த சிக்கல்களை உடனடியாக சரி செய்யவும், நீதி அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்
இலங்கை அரசியலமைப்பின் 13(4) வது பிரிவின்படி தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கும் உரிய நடைமுறை மற்றும் வாழ்க்கைக்கு உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் இடம்பெறுவதை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சரின் சமீபத்திய அறிக்கைகள் சில சட்டத்தரணிகளை போதைப்பொருள் குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளமை குறித்தும் சங்கம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இந்தநிலையில் அனைத்து இலங்கையர்களுக்கும் நீதியான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சட்டத்தின் ஆட்சி மற்றும் உரிய நடைமுறைகளை உறுதியாக நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
