மத்தியகுழுத் தீர்மானத்தை நான் ஏற்கவில்லை: பொய்யுரைக்கிறார் சுமந்திரன்! சிறீதரன் பகிரங்கம்
செப்டெம்பர் முதலாம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற தீர்மானத்தை நான் ஏற்றுக்கொண்டதாக சுமந்திரன் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் நான்கு மத்தியசெயற்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட போதும்" இணைந்த வடகிழக்கில் உள்ளக சுயநிருணய உரிமையுடன் கூடிய சுயாட்சித் தீர்வை" தென்னிலங்கை வேட்பாளர்கள் முன்வைத்தால் மட்டுமே அவர்களை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்ற எனது நிலைப்பாட்டை அனைத்துக் கூட்டங்களிலும் நான் உறுதியாக வெளிப்படுத்தியிருந்தேன்.
அந்த அடிப்படையிலேயே ஆகஸ்ட் 18ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில், தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து, மத்திய செயற்குழுவுக்கான சிபாரிசினை முன்வைப்பதற்காக 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
ஆனால் அந்தக் குழு, இணையவழியில் கூட ஒரு தடவையேனும் கலந்துரையாடாத நிலையிலேயே கடந்த முதலாம் திகதி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் அவசர அவசரமாக மத்திய குழுவில் மேற்கோள்ளப்பட்டது.
குறித்த தீர்மானத்தை நான் ஏற்கவில்லை என்பதையும், அந்தத் தீர்மானம் ஜனநாயக விரோதமானது என்பதையும் சுட்டிக்காட்டி நான் பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். இந்த நிலையிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை 6 பேர் கொண்ட செயற்குழு 5 பேரின் பங்கேற்போடு வவுனியாவில் கூடியது.
இதன்போதும் நான், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற எனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று மிகத் தெளிவாக கூறியிருந்தேன். பொது வேட்பாளருக்கான ஆதரவுத்தளத்தில் நீங்கள் நீண்டதூரம் சென்றுவிட்டதால் இனி அதிலிருந்து பின்வாங்க முடியாது என்பதை தானும் ஏற்பதாக சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, மத்தியகுழுத் தீர்மானம் தொடர்பிலான எதிர்மனோநிலையினை நானும், மாவை.சேனாதிராஜா மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரும் வெளிப்படுத்தியதோடு, கட்சித் தலைவரும், சிரேஷ்ட உபதலைவரும் இணைந்து எமது மக்களுக்கான தெளிவூட்டல் அறிக்கையொன்றை எதிர்வரும் வாரம் வெளியிட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறிருக்க, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை நான் ஏற்றுக்கொண்டதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பட்டிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை என்பதை மக்களுக்கு மீண்டும் உறுதியளிக்கிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.