இரகசியமாக விமானத்திற்குள் நுழைய முற்பட்ட இளைஞன் விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்புச்சாவடியினூடாக பதுங்கி விமான நிலைய முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்திற்குள் நுழைய முற்பட்ட இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் இரண்டு முறை வெளிநாடு சென்றுள்ள நிலையில், கடைசியாக இந்தியாவில் சென்னையில் தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
மனநோய் அறிக்கை
இந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியினூடாக இன்று அதிகாலை 03.45 மணிக்கு இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த 6E-1172 என்ற IndiGo விமானத்தில் ஏற முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞனின் சகோதரர் ஒருவரை பொலிஸார் அழைத்து முன்னெடுத்த விசாரணைகளின் போது அவர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான வைத்திய சிகிச்சையையும் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், கடந்த ஒரு மாதமாக மனநோய்க்கு தேவையான மருந்தை சாப்பிடவில்லை என்றும் அந்த இளைஞனின் சகோதரன் கூறியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான மனநோய் அறிக்கை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |