இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக தமிழர் தெரிவு
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (SLFF) தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஜகத் ரோஹன ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
இதற்கமைய ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் ஜகத் ரோஹன 24 வாக்குகளையும் பெற்றுள்ளதுடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜே.ஸ்ரீரங்கா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாகக் குழு தேர்தல்
இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று (14.01.2023) கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 20ஆம் திகதி ஜனவரி 2022 அன்று நிறைவடைந்திருந்தது. இதில் மொத்தம் 10 பதவிகளுக்கு 40 வேட்பாளர்கள் விண்ணப்பித்திருந்தார்கள்.
புதிய நிர்வாகிகள் ஐந்து மாத காலத்திற்கு பதவியில் இருப்பதுடன் இவ்வாண்டு மே 31 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் தலைவர் யூ.எல். ஜஸ்வர் புதிய தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.