வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் பொது மக்களுக்கு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு வெளிநாட்டு வேலைக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டுபாய், மாலைதீவு மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சரியான வேலை அனுமதி உத்தரவு இல்லாமல் ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் முறையான வேலை உத்தரவு இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வு பிரிவு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேக நபர் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு வேலை வழங்குவதற்காக ஆட்களை ஆட்சேர்ப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டுகள்
குறித்த இடத்தில் 272 கடவுச்சீட்டுகள், சுய விபரகோவை மற்றும் பல ஆவணங்கள் காணப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்துகிறது.