இலங்கை போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் (Video)
இலங்கையின் நடந்த குற்றங்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான கெய்ர் ஸ்டர்மேர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், இலங்கை போரின் இறுதிக்கட்டத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாம் நினைவுகூருகிறோம். தொழிற்கட்சி தமிழ் மக்களுடன் கை கோர்த்து நிற்கின்றது.
இந்த நாளை நாம் நிதானித்துச் சிந்திக்கும்போது, எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. ஆனால் நாம் இழந்தவர்களை நினைவு கூறும் போது இது உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.
13 ஆண்டுகளாகியும் இந்தக் கொடுமைகளைச் செய்த குற்றவாளிகள் இன்னும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இன்று, இத்தகைய பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு ஆளானவர்களுக்கும் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தொழில் கட்சி மீண்டும் உறுதியளிக்கின்றது.
ஐக்கிய இராச்சிய அரசாங்கம்(Uk) தமிழர்களுடன் நிற்க வேண்டும் என்றும், அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ICC ) ஐ.நா உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளுக்கு அமைய அனுப்ப வேண்டும்'' இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.