ரஷ்யாவில் அதிரடி காட்டிய இலங்கை பாதுகாப்பு படை
ரஷ்யாவில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் போர்ப்பயிற்சியில் இலங்கை இராணுவத்தினர் வெற்றிகரமாகப் பங்கேற்று நாடு திரும்பியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
20 அதிகாரிகள் மற்றும் 55 ஏனைய நிலைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 75 பேரடங்கிய இராணுவக் குழுவினர், ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விளாடிவோஸ்டோக் (Vladivostok) நகரில் செப்டம்பர் 18 முதல் 25 வரை நடைபெற்ற 'வோல்வரின் பாத் II' (Wolverine Path II) என்ற கூட்டுப் போர்ப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
முக்கிய பாதுகாப்பு யுத்திகள்
பயிற்சியை நிறைவு செய்த இராணுவத்தினர் செப்டெம்பர் 28ஆம் திகதி அன்று மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தனர்.

ஹெலிகொப்டரிலிருந்து கயிறு மூலம் இறங்குதல், நெருங்கிய தாக்குதல், துப்பாக்கிச் சூடு, தாக்குதல் மற்றும் தற்காப்பு உத்திகள், தந்திரோபாய மருத்துவப் பயிற்சி மற்றும் ட்ரோன் இயக்கம் போன்ற துறைகளில் இந்த சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பல்வேறு தந்திரோபாய சூழ்நிலைகளில் இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதற்கும், செயல்பாட்டு அனுபவங்கள் மற்றும் பயிற்சி முறைகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்த பயிற்சித் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.