Sandpapergate-ன் மறுபக்கம் வெளிவருமா! அவுஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு
2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் புதிய விசாரணையை நடத்தப்போவதில்லை என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
எனினும், அந்த சம்பவத்துடன் தொடர்புடைய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்வதற்காக சுயாதீன மன்றமொன்றை அமைக்கவுள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
மீண்டும் சர்ச்சை
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா தனது சுயசரிதை நூலில், பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் குறித்து முழு அணிக்கும் தெரிந்திருந்ததாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், தற்போதைய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
முன்னாள் வீரர் டேவிட் வோர்னர், கவாஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணை முறையாக இடம்பெறவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்போதைய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், துணைத்தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் கமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்புள்ளதாக அப்போதைய விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூவரும் நாடு திருப்பப்பட்டதுடன், போட்டித் தடைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
தற்போது அமைக்கப்படவுள்ள புதிய மன்றம் முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இயங்கக்கூடும் என இடைக்காலத் தலைவர் டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.
திறந்த விசாரணை
இந்த மன்றத்தின் மூலம் எவருக்கும் புதிதாகத் தண்டனைகள் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மன்றத்தின் அறிக்கை முழுமையாகப் பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா என்பது குறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியா உறுதியளிக்கவில்லை. முடிந்தவரை வெளிப்படைத்தன்மை பேணப்படும் என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி டோட் கிரீன்பேர்க் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திறந்த விசாரணையொன்றே நடத்தப்பட வேண்டும் என டேவிட் வோர்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

உஸ்மான் கவாஜாவும் வீரர்கள் தங்களது கருத்துக்களைப் பாதுகாப்பான சூழலில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை வரவேற்றுள்ளதுடன், இறுதியில் எந்தத் தகவல்களை வெளியிடுவது என்பதை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நிர்வாகமே தீர்மானிக்கும் என்பதால் வெளிப்படைத்தன்மை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சைக்கு மீண்டும் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தமது தரப்பு விளக்கங்களை முன்வைக்க வாய்ப்பளித்து அணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை முடிவுக்குக் கொண்டுவருவதே கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நோக்கமாகும்.