சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை நம்ப வேண்டாம்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
கண்டியில் நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் போல் நடித்து, கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து பணத்தைத் திருடும் மோசடியாளர்கள் சம்பந்தப்பட்ட 12க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் சமீபத்திய நாட்களில் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் தகவல்படி, பாதிக்கப்பட்டவர்களில் 80 வயது முதியவர் ஒருவரும் அடங்குவார். இந்த மோசடித் திட்டத்தின் மூலம் அவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 7 மில்லியன் ரூபாயை இழந்ததாகக் கூறப்படுகிறது.
மோசடிக்காரர்கள்
அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக நடித்து, மோசடிக்காரர்கள் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொள்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடி செய்பவர்கள், அழைப்பைப் பெறுபவரின் கைபேசித் திரையில் சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்தைக் காட்டுவதன் மூலம், அந்த அழைப்புகளும் செய்திகளும் உண்மையானவை என்ற தோற்றத்தை உருவாக்கும் ஒரு ஏமாற்று நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசடிக்காரர்கள், கணக்கு வைத்திருப்பவர்களின் நம்பிக்கையைப் பெற்று, போலியான இணைப்புகள் அல்லது தொலைபேசி உரையாடல்கள் மூலம் கடவுச்சொற்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTPs) உள்ளிட்ட ரகசிய வங்கித் தகவல்களைப் பெறுவதாக கூறப்படுகழன்றது.
அறிவுறுத்தல்
பின்னர் அந்தத் தகவலைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை அணுகி, மோசடியாகப் பணம் எடுக்கப்படுகிறது.
முறையான வங்கிகள், தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் வாடிக்கையாளர்களின் கடவுச்சொற்களையோ அல்லது ஒருநாள் கடவுச்சொல்களையோ (OTP) கேட்பதில்லை என வலியுறுத்தியுள்ள பொலிஸார் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகளையோ செய்திகளையோ நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.