அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த பிக்குவான நாவோட்டுன்னே விஜித்த தேரருக்கு 13 ஆண்டுகள் 2 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் பௌத்த விகாரை ஒன்றில் 6 சிறுமிகளை தவறான நடத்தைக்கு உட்படுத்தியமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, அவருக்கு விக்டோரியா மாகாண நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆஸ்திரேலியா - மெல்போர்னின் அமைந்துள்ள விகாரையின் விகாராதிபதியாக பணியாற்றிய குற்றவாளி, கடந்த 1994 முதல் 2002ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விகாரைக்கு வருகை தந்த 6 சிறுமிகளைத தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
9 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைவாசம்
இதற்கமைய, விதிக்கப்பட்ட தண்டனையின் கீழ், குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னரே நிபந்தனை அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான தகுதியை தேரர் பெற முடியும்.

மதத் தலைவர் என்ற முறையில் அவர் மீதும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் வைத்திருந்த நம்பிக்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி பர்தீப் திவானா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் பல தசாப்தங்களாக மன உளைச்சலை எதிர்கொண்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
நாடு கடத்தல்
தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்களை பார்த்து தேரர் சிரித்துவிட்டு கையை அசைத்துள்ளார்.

சில ஆதரவாளர்கள் அவருக்கு வணங்கி மரியாதை செலுத்தியமையும் பாதிக்கப்பட்டவர்களின் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிறைத்தண்டனை முடிந்ததும் அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தான், சுவீடனுக்கு திரும்புவதற்கு விரும்புவதாகவும் தேரர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் நடந்த திருட்டு - இவரை கண்டால் அறிக்கவும்..! பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்