மிகப்பெரிய ஈனச் செயலை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது: க.ஜெகதாசன் அடிகளார்
வஞ்சகமாக அக்கிரமத்தை மூடி மறைத்து மிகப்பெரிய ஈனச் செயலை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் அருட்பணி க.ஜெகதாசன் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (14.10.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
ஐந்து ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டம்
“நாங்கள் அறிந்தபடி கடந்த 13 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைத் தேடி அவர்களது உறவுகள் கடந்த ஐந்து ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகளின் சபைக்கு சென்றும் சாட்சியமளித்தும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற இந்த சூழலிலே இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிலவரத்தை மூடி மறைத்து அந்த உண்மையினை இல்லாமல் ஆக்கி தங்களது அநியாயங்களையும் அராஜகங்களை மூடி மறைப்பதற்காக அரசாங்கம் தற்போது புதிய ஒரு புத்தியை கையாண்டு வருகின்றது.
வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப்பகுதிகளில் காணப்படுகின்ற பிரதேச செயலகங்களுக்கு சென்று அதனூடாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தித்து அவர்களுக்கு ரூபா 2 லட்சம் கொடுத்து அந்தக் கதையை அப்படியே மூடி மறைப்பதற்கு அல்லது இனி தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என கேட்காமலிருப்பதற்கு மிக மோசமானதும் நாம் வெட்கி தலை குனிய வேண்டியதுமான ஒரு செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர்
வலிந்து அவர்களை காணாமல் ஆக்கிவிட்டு அதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக இன்று இரண்டு லட்சம் கொடுத்து மறைக்க முயல்கின்றது. ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஒரு குற்றத்தை மறைப்பதற்காக லஞ்சத்தை கொடுப்பதுபோன்ற படுகேவலமான செயற்பாட்டை இந்த அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
தாங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய இன அழிப்பினுடைய சாட்சிகளாகவும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குசாட்சிகளாக இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நீதிகேட்கும் நிலையில் அரசாங்கம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.
ஒரு மனிதனுடைய வாழ்வுக்கும் உயிருக்கும் இரண்டு லட்சம் தொகையினை தீர்மானித்து அதனை இலஞ்சம்போன்று கொடுத்து அதை மூடி மறைக்கின்ற செயற்பாட்டை அரசாங்கம் செய்கின்றது.
நீண்ட நெடுங்காலமாக உறவுகளுக்கான இந்த நீதிக்கான இந்தப் போராட்டத்திலே இணைந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் உங்களுடைய போராட்டம் உண்மையானது நீதியானது, தார்மீகமானது.
தயவுசெய்து யாரும் இந்த அரசாங்கத்தினுடைய வஞ்சகமான சூழ்ச்சி வலையிலே தயவுசெய்து நீங்கள் விழுந்து விட வேண்டாம். உங்களை இவ்வாறு வஞ்சகமாக ஏமாற்றி பணத்தைக் காட்டி இந்த அநியாயத்தை அக்கிரமத்தை மூடி மறைத்து மிகப்பெரிய ஈனச் செயலை அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.
தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டங்களிலே பிரதேச செயலகங்கள் ஊடாக இந்த ஈனச்செயலை அரசாங்கம் அரங்கேற்றி இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க மூடிமறைப்பதற்கான சதியை அரசாங்கம் திட்டமிட்டு முயற்சித்து வருகின்றது.
ஆகவே உறவுகள் இதற்குள் வீழ்ந்துவிடாமல் நீதிகோரி அரசாங்கத்தின் இந்த படுகேவலமான செயற்பாட்டை கண்டித்து மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பாதிக்கப்பட்ட உறவுகள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய கண்டன பேரணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு அரசினுடைய இந்த மூடி மறைக்கின்ற வேலை திட்டத்தை நிறுத்துவதற்கும் தொடர்ந்து நீதி கோருவதற்கும் அனைவரும் ஒன்றிணை மாறும் மிகவும் அன்புடன் அனைவரையும் வரவேற்கின்றோம்.” என்றார்.



