தமிழர்களால் எவ்வாறு இலங்கையராக உணரமுடியும் - கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்பி
1950களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் தொடக்கம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் தமிழ்மக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
இந்தநாட்டில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டது பெரும்பான்மை இனத்தவர்களான உங்களுக்கு வெற்றியாகும்போது, இத்தீவிலுள்ள தமிழர்கள் எவ்வாறு தம்மை இலங்கையர்களாக உணரமுடியுமெனவும் கேள்வி அவர் எழுப்பியுள்ளார்.
எனவே, இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை இலங்கையர்களாக உணரவைக்கும் நல்லிணக்கத்தை இத்தீவிலுள்ள பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இனியேனும் ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட பிரேரணை
நாடாளுமன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்மொழியப்பட்ட பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, அவர் மேலும், "அடைக்கலநாதனல் இன்று கொண்டுவரப்பட்டுள்ள இப்பிரேரணையை வரவேற்று பாதிக்கப்பட்ட தமிழினத்தின் சார்பாளராக, நாமும் வழிமொழிகிறோம்.
இதுவரை கிட்டாத நீதிக்காக - 43 ஆண்டுகளாகியும் - எங்கள் ஒவ்வொரு சாட்சியும் மெல்ல மெல்ல வயது முதிர்ந்து காலமாகிச் செல்ல, எஞ்சியிருக்கும் சாட்சிகளோடு இன்றும் நீதிக்காக காத்திருக்கிறோம்.
ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்று போராடி பிரித்தானியரை வெளியேற்றி ஒன்றாகி அடைந்த ஒரு விடுதலை, பின்னாளில் தனித்த ஒரு பெரு இனத்துக்கு மட்டும் தானா?
என்று எம்மில் எல்லோருமே கேட்கின்ற அளவுக்கு இந்தத்தீவில் எங்களின் விடுதலை மீளப் பறித்தெடுக்கப்பட்டது. நாங்கள் நீண்ட காலமாக - மிக நீண்டகாலமாக நீதிக்காக காத்திருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS..
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை