நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான அச்சம்.. நாமல் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்
தற்போதைய அரசு பொறுப்பேற்றுள்ள கடந்த இரண்டு ஆண்டுகளில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது டெங்குத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனநாயகத்துக்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அச்ச நிலை
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய அரசு பதவியேற்ற காலப்பகுதியில் இருந்து மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் போன்று அல்லாமல், இன்று நாளாந்தம் யாருக்குத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்ற அச்சத்துடன் சிந்திக்க வைக்கும் அளவுக்குத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியையும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலகட்டத்தையும் விடவும் அதிகமான அளவிலான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தற்போதைய ஆட்சியில் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
இந்த ஆட்சியில் மக்களை எவ்வாறு வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது" என்றார்.