நிலுவை தொகையை செலுத்த தவறிய இலங்கை உயர்ஸ்தானிகரகம்: பிரித்தானியா குற்றச்சாட்டு
லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் உட்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு தூதரகங்கள், நாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களில் மில்லியன் கணக்கிலான தொகைகளை இதுவரை செலுத்தவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக துணை செயலாளர் டேவிட் ரட்லி இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம்; மொத்த நிலுவையாக 652,120 பவுண்ட்ஸ்களை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வியன்னா உடன்படிக்கை
இந்தநிலையில் இராஜதந்திர உறவுகள் மீதான வியன்னா உடன்படிக்கையின் கீழ், இராஜதந்திரிகள், நாட்டின் சட்ட ஒழுங்குமுறைகளை மதிக்க வேண்டிய கடமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து இராஜதந்திர பணிகளும் இங்கிலாந்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் நெரிசல் கட்டணத்தை செலுத்துவதும் அடங்கும் என்று வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக துணை செயலாளர் டேவிட் ரட்லி தெரிவித்துள்ளார்.