பணப் பூங்கொத்துகளுக்குத் தடை: ஆப்பிரிக்க வங்கிகளின் அதிரடி எச்சரிக்கை
நைரோபி உட்பட பல ஆப்பிரிக்க நகரங்களில் காதலர் தினத்தன்று சிவப்புக் ரோஜாக்களுக்குப் பதிலாக, நாணயத் தாள்களால் செய்யப்பட்ட 'பணப் பூங்கொத்துகள்' (Money Bouquets) வழங்கும் கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது.
சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்த இந்த திட்டம், தற்போது கென்யா, உகாண்டா, ருவாண்டா, போட்ஸ்வானா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நாணயத் தாள்களை மடித்தல், ஒட்டுதல் அல்லது ஸ்டேப்ளர் பின் கொண்டு இணைப்பதன் மூலம் அவை சேதமடைவதாகவும், இது நாட்டின் சட்டப்படி குற்றமாகும் என்றும் வங்கிகள் எச்சரித்துள்ளன.
சிறைத்தண்டனை
கென்ய மத்திய வங்கி (CBK), இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

நாணயத் தாள்கள் சேதமடைவதால் அவை ஏ.டி.எம் (ATM) இயந்திரங்கள் மற்றும் பணம் எண்ணும் கருவிகளில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
இதனால் சேதமடைந்த தாள்களை புழக்கத்திலிருந்து நீக்கிவிட்டு, புதிய நோட்டுகளை அச்சிட வரி செலுத்துவோரின் பணம் வீணாவதாக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பூங்கொத்து கலாச்சாரம்
இந்தப் பணப் பூங்கொத்து கலாச்சாரம் வெறும் காதலர் தினத்துடன் நிற்காமல், பிறந்தநாள் மற்றும் இதர விழாக்களுக்கும் பரவியுள்ளதால், ஆண்டு முழுவதும் இதற்கான தேவை அதிகரித்துள்ளது.

எனினும், பூ வியாபாரிகள் தாள்களைச் சேதப்படுத்தாமல் வெளிப்படையான பைகளில் (Transparent pockets) வைத்து பூங்கொத்துகளை உருவாக்கும் புதிய முறைகளை ஆலோசித்து வருகின்றனர்.
அன்பு என்பது வெறும் பணத்தால் வாங்கப்படுவது அல்ல என்று சில இளைஞர்கள் வாதிட்டாலும், நடைமுறைத் தேவைகளுக்குப் பணம் தான் சிறந்த பரிசு என்று பலர் கருதுகின்றனர்.