அனோஜன் மீதான தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள தகவல்! வேறு சிறைக்கூடத்திற்கு மாற்றம்
மரண தண்டனை விதிக்கப்பட்டு சவுதி அரேபிய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு, அங்கு தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பான விளக்கத்தினை வழங்கியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
தற்போது சிவராசா அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு தூதரக அதிகாரிகள் இரண்டு சந்தர்ப்பங்களில் சென்றுள்ளனர். சிறைச்சாலை வளாகத்தில் அனோஜன் மீது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக, அக்டோபர் 06ஆம் திகதியும்(நேற்று) தூதரக அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று நிலவரங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.
இருவருக்கு இடையில் மோதல்
சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அனோஜன் சிவராசாவுக்கும், அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு கைதிக்கும் இடையில் முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலின்போது, அனோஜனின் முகத்தில் கீறல் காயங்களும் சிறு அளவிலான காயங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தக் காயங்களை ஏற்படுத்துவதற்காக கூர்மையான கத்தி அல்லது வேறு எந்த ஆயுதமும் பயன்படுத்தப்படவில்லை என்பதும், அந்தக் காயங்கள் மற்றுமொரு கைதியின் நகங்களால் ஏற்பட்டவை என்றும் மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தூதரக அதிகாரிகளிடம் அந்த சிறைச்சாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், அனோஜனின் பாதுகாப்பையும், நலனையும் உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அனோஜன் வேறு ஒரு சிறைக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் எமது தூதரக அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அனோஜனின் தற்போதைய உடல்நிலை தொடர்பான தகவல்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து சட்ட ஆவணங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் அவருடைய குடும்பத்தினருக்கு வெளிவிவகார அமைச்சு வழங்கி வருகின்றது.

சவுதி அரேபியாவின் சட்ட மற்றும் நீதித்துறை கட்டமைப்புக்களுக்கு அமைவாக, அனோஜனை காப்பாற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக மேற்கொண்டு வருகின்றது.
இந்த உணர்வுபூர்வமான விடயத்தை மிகவும் பொறுப்புடன் கையாளுமாறும், அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் எதிர்பார்ப்பின்றி அனைவரும் செயற்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.