சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாதாள உலக உறுப்பினர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பாதாள உலகக்கும்பலின் முக்கிய தலைவரான 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக மற்றும் சலிது மல்ஷித ஆகிய பாதாள உலக செயற்பாட்டாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மடகாஸ்கரில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பாதாள குழு உறுப்பினர்கள் இருவரையும் இலங்கைக்கு விமானம் மூலம் அழைத்து வரும் முயற்சிகள் தாமதமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களை நாட்டிற்கு அழைத்துவர சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் இதுவரை பதில் வழங்கவில்லை என்று பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றது.
விமானம் நிறுவனம் விதித்துள்ள நிபந்தனை
இந்த இரண்டு சந்தேகநபர்களையும் சாதாரண பயணிகள் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, விமான நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர்களை தனி விமானத்தில் மாத்திரே ஏற்றிச்செல்ல வேண்டும் என்று சில விமான நிறுவனங்கள் நிபந்தனை விதித்துள்ளன.
மேலும், சந்தேகநபர்கள் அமரும் இருக்கைக்கு முன் ,பின் வரிசை இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் எனவும் அந்த இருக்கைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சந்தேநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைக்கும் வாதங்களின் அடிப்படையில் இந்த இரு சந்தேகநபர்களையும் இலங்கைக்கு அழைத்து வர முடியாத நிலை ஏற்படலாம் என்பதால், அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




