சர்வதேச சட்டங்களைப் பின்பற்ற இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும்! அமைச்சர் விஜித ஹேரத் உறுதி
சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளைப் பின்பற்றுவதற்கு இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி பால் கபூருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
பகிரங்க அழைப்பு
இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் புதிய பொருளாதார ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், இலங்கைக்குத் தடையின்றி எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் அமெரிக்கா வழங்கிய இராஜதந்திர உதவிகள் உட்பட, தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக அமெரிக்க அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட நவீன கடல்சார் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கும் அவர் இதன்போது நன்றி கூறினார்.
“நாட்டில் தற்போது முறையான சட்டத்தின் ஆட்சியின்கீழ் பாதுகாப்பான மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவின் முன்னணி வணிக நிறுவனங்கள் இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய முன்வர வேண்டும்” என்று வெளிவிவகார அமைச்சர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அவ்வாறு வரும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதில் அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்குப் பதிலளித்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி பால் கபூர், அமெரிக்கா இலங்கையுடனான தனது நீண்டகால நட்புறவை பெரிதும் மதிப்பதாகக் குறிப்பிட்டதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுவான நிலைக்குக் கொண்டு செல்ல எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.




